

வெளிநாட்டினர் மிக எளிதாக பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு வசதியாக அன்னிய முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு கொள்கையில் மிகப் பெரும் மாறுதல்களைச் செய்ய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) முடிவு செய்துள்ளது.
இதற்காக சனிக்கிழமை புதிய கொள்கை முடிவை செபி அறிவிக்க உள்ளது. இந்த உத்தேச முடிவில் அன்னிய முதலீட்டாளர்கள் எவ்வித பதிவுக் கட்டணமும் செலுத்தத் தேவையிருக்காது என தெரிகிறது.
அன்னிய முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் பதிவு எண் நிரந்தமானது. இதை நீக்கும் உரிமை அல்லது ஒழுங்கு நடவடிக்கையாக செபி மட்டுமே இந்த எண்ணை நீக்க முடியும்.
பல்வேறு பிரிவுகளாக இருந்த அன்னிய முதலீட்டாளர்களை வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (எஃப்.பி.ஐ.) என்று ஒரே பிரிவில் ஒருமுகப்படுத்தியுள்ளது செபி. அன்னிய முதலீட்டாளர்களுக்கென ஒரே சீரான நுழைவு வழியை செபி வகுத்துள்ளது. மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எடுக்கும் ரிஸ்க் அளவுக்கு ஏற்ப அவர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
முதல் பிரிவு குறைந்த ரிஸ்க் எடுக்கும் அன்னிய முதலீட்டாளர் களுக்கு (அரசு மற்றும் அரசு நிறுவனங்களுக்கு). இரண்டாவது பிரிவில் நடுத்தர ரிஸ்க் எடுப்பவர்களுக்கும் (வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட்கள், பென்ஷன் ஃபண்ட்கள் உள்ளிட்ட) மூன்றாவது பிரிவில் அதிக ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்களும் இருப்பார்கள்.மூன்றாவது பிரிவானது அதிகபட்ச ரிஸ்க் கொண்டது. அதாவது தனியார் நிறுவனங்கள் மற்றும் ஹெட்ஜ் நிதியங்களாகும்.
தகுதிவாய்ந்த அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்(கியூ.எஃப்.ஐ) வழங்கம் போல முதலீடு செய்யலாம். பங்குகளை விற்கலாம். அவர்களது பதிவு எண்ணுக்கான உரிமக் காலம் உள்ளவரை இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
தவிர க்யூஎப்ஐ-க்கள் ஓராண்டு வரை வர்த்தகம் செய்ய அனுமதிக்கப் படும். இந்த ஓராண்டுக்குள் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளருக்கான(எஃப்.பி.ஐ.) உரிமத்தை வாங்க வேண்டும்..
முதல் பிரிவில் இருக்கும் அன்னிய முதலீட்டாளர்களிடம் எவ்வித பதிவுக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. இருப்பினும் இரண்டா வது மற்றும் மூன்றாவது பிரிவில் முதலீடு செய்யும் அன்னிய முதலீட்டாளர்கள் ஆண்டுக் கட்டண மாக ஆயிரம் டாலர் செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் பதிவு எண் பெற ஆயிரம் டாலர் செலுத்த வேண்டும்.
செபி-யின் புதிய கொள்கை களை அமைச்சரவைச் செயலர் கே.எம்.சந்திரசேகரன் குழு பரிந்துரைத்ததற்கு கடந்த ஜூனில் செபி குழு ஒப்புதல் அளித்தது. பிறகு இதை அமல்படுத்துவதற்காக அரசுக்கு அனுப்பப்பட்டது.
அன்னிய முதலீட்டாளர்கள் முதன்மைச் சந்தை மற்றும் இரண்டாம் நிலை சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவர்.
டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிவைச் சந்தித்த போது பங்குச் சந்தையிலிருந்து அதிக அளவில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்று விட்டு வெளியேறின. இதனால் அன்னிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் பொருட்டு இத்தகைய நடவடிக் கைகளை செபி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.