

கடன் பிரச்சினையில் உள்ள ஜேபி அசோசியேட்ஸ் பங்கு நேற்றைய வர்த்தகத்தில் 27 சதவீதம் உயர்ந்து முடிந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 37.66 சதவீதம் உயர்ந்தாலும், வர்த்தகத்தின் முடிவில் 27 சதவீதம் உயர்ந்து 11.62 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
கடந்த மார்ச் மாதம் ஜேபி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் சிமென்ட் ஆலையை ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ரா டெக் வாங்கியது. அப்போது ரூ.15,900 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை இந்த ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 289 கோடி ரூபாய் கூடுதலாக கொடுக்க அல்ட்ரா டெக் ஒப்புக்கொண்டது. இப்போது இந்த இணைப்பின் மதிப்பு ரூ.16,189 கோடி ஆகும்.
இதன் காரணமாக ஜேபி குழுமத்தின் பங்குகள் உயர்ந்தன. ஜேபி இன்பிராடெக் பங்கு 15 சதவீதம் உயர்ந்து 10.60 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது. ஜெய்பிரகாஷ் பவர் வென்ச்சர்ஸ் 10.78 சதவீதம் உயர்ந்து ரூ.5.65-ல் முடிவடைந்தது.
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் ஜேபி இன்பிராடெக் பங்கு கடந்த ஒரு மாதத்தில் 100 சதவீதம் உயர்ந்துள்ளன. இதனிடையே அல்ட்ரா டெக் சிமென்ட் பங்கு ஒரு சதவீதம் சரிந்து ரூ.3,375யில் முடிவடைந்தது.
111 புள்ளிகள் சரிவு
தொடர்ந்து ஆறு வர்த்தக தினங்களாக உயர்ந்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சரிவை சந்தித்தன. வர்த்தகத்தின் தொடக்கத்தில் நிப்டி 8 புள்ளிகளும் சென்செக்ஸ் 62 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகத்தை தொடங்கினாலும் வர்த்தகத்தின் முடிவில் சரிவை சந்தித்தன. முடிவாக சென்செக்ஸ் 111 புள்ளிகள் சரிந்து 27166 புள்ளிகள் முடிவடைந்தது. நிப்டி 34 புள்ளிகள் சரிந்து 8335 புள்ளிகளில் முடிவடைந்தன. முந்தைய ஆறு வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 881 புள்ளிகள் உயர்ந்தன.
ஆட்டோ, மின்சாரம், ரியால்டி, ஐடி மற்றும் டெலிகாம் ஆகிய துறைகளில் சரிவு இருந்தது. முதலீட்டாளர்களிடம் லாபத்தை வெளியே எடுக்கும் போக்கு இருந்ததால் சரிவு இருந்தது.
பவர் கிரிட் (-2.3%),கெயில் (-2.4%), பார்தி ஏர்டெல் (-2.16%), என்டிபிசி (-1.8%), டாடா மோட்டார்ஸ் (-1.7%) ஆகிய பங்குகள் அதிகம் சரிந்தன.
இன்று விடுமுறை
ரம்ஜானை முன்னிட்டு இன்று இந்திய பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை ஆகும். தவிர கரன்ஸி, புல்லியன் ஆகிய சந்தைகளுக்கும் விடுமுறை ஆகும்.