

சஹாரா நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திரும்ப வழங்காததையொட்டி ஆம்பி வேலியில் உள்ள சொத்தை ஏலத்தில் விட நேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகோய், ஏ.கே. சிக்ரி ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சஹாரா குழுமம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம், இதுவரை நீங்கள் அளித்த விளக்கம் போதும். இனிமேலும் விளக்கம் கேட்கத் தயாராக இல்லை. நீங்கள் ஒரு விளக்கத்தை அளித்துவிட்டு அதை மறுநாளே மறந்துவிடுகின்றனர் என்று குறிப்பிட்டனர்.
சொத்துகளை விற்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு அதிகாரபூர்வ அமைப்பாக மும்பை உயர்நீதிமன்றம் நியமித்திருந்த நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சொத்துகளை விற்பது தொடர்பான அனைத்து விவரங்களையும் சுப்ரதா ராய் மற்றும் செபி அமைப்பு விற்பனை செய்ய நியமிக்கப்பட்ட அமைப்புக்கு 48 மணி நேரத்துக்குள் தர வேண்டும் என உத்தரவிட்டது.
முதலீட்டாளர்களின் ரூ.24,000 கோடி நிதியை மோசடி செய்த விவகாரத்தில் சஹாரா குழுமத்
தலைவர் சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 18 மாதங்களுக்குள் ரூ.36,000 கோடியை இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியம் (செபி) அமைப்பிடம் சுப்ரதா ராய் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. 9 தவணைகளாகச் இந்த பணத்தைச் செலுத்த அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியம் (செபி) வசம் உள்ள சஹாரா குழுமத்தின் சொத்துகளை விற்பனை செய்வதற்கும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில் தவணைத் தொகையான ரூ.5,000 கோடியை செபியின் கணக்கில் ஏப்ரல் 17-ஆம் தேதிக்குள் டெபாசிட் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. டெபாசிட் செய்யவில்லையென்றால் சஹாரா நிறுவனத்தின் ஆம்பி வேலி சொத்து ஏலத்தில் விடப்படும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது. ஆனால் சஹாரா நிறுவனம் டெபாசிட் செய்யவில்லை.
இந்த நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சஹாரா நிறுவனத்துக்குச் சொந்தமான ஆம்பி வேலி சொத்துகளை ஏலத்தில் விட உத்தரவிட்டனர்.
தவிர இம்மாதம் 28-ம் தேதி சுப்ரதா ராய் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அமெரிக்காவில் உள்ள சஹாரா குழும ஹோட்டலை விற்பது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்த பிரகாஷ் சுவாமி என்பவர் இந்தியாவிலிருந்து வெளியேற ரூ. 10 கோடி அபராதத்தை செபி-யிடம் செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது பிரகாஷ் சுவாமியும் ஏப்ரல் 28-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.