

இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆலை அமைப்பதற்காக ஆப்பிள் நிறுவனத்தின் வரிச் சலுகை கோரிக்கைகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. மேலும் வரிச் சலுகை அளிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாக மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
இருந்தபோதிலும் ஆப்பிள் நிறுவனத்தின் கோரிக்கைகளை முதற்கட்ட அடிப்படையில் மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் அமைச்சர்கள் குழுவை சந்தித்திருக்கிறது.
இந்த சந்திப்பில் ஆப்பிள் நிறுவனத்தின் வரிச்சலுகை கோரிக்கைகள் அனைத்தையும் பற்றி விவாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மத்திய அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கு உண்டான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சிறப்பு பொருளாதார மண்டலங்களிலிருந்து உள்நாட்டு சந்தையில் விற்கப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது, சிறப்பு பொருளாதார மண்டலங்களிலிருந்து உற்பத்தி செய்து உள்நாட்டு சந்தையில் விற்கப்பட்டால் இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஏற்றுமதி செய்யப்பட்டால் எந்த வரி விதிப்பும் கிடையாது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றி தருவதற்கு சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. ஏனெனில் சில உள்நாட்டு நிறுவனங்களும் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக் கின்றன.
ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு நிறைவேற்றினால் இந்தியா ஸ்மார்ட்போன் உற்பத்தி மையமாக உருவாவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படும் என்று கூறப் படுகிறது.