Published : 28 Aug 2016 11:07 AM
Last Updated : 28 Aug 2016 11:07 AM

2025-ம் ஆண்டு 25% மக்கள் டாடா-வின் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள்: டாடா சன்ஸ் முகுந்த் ராஜன் நம்பிக்கை

டாடா குழுமம் காலாண்டு அடிப்படையில் இலக்கு நிர்ணயம் செய்வதில்லை. ஆனால் 2025-ம் ஆண்டில் உலகில் 25 சதவீத மக்கள் டாடா குழுமத்தை பயன்படுத்துவார்கள். அதனை இலக்காக கொண்டுதான் டாடா குழுமம் செயல்படுகிறது என சென்னை சர்வதேச மையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முகுந்த் ராஜன் குறிப்பிட்டார். இவர் டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல் குழு உறுப்பினர் மற்றும் டாடா பிராண்ட் பொறுப்பாளராகவும் இருக்கிறார்.

கடந்த 25 ஆண்டுகளில் டாடா குழுமம் எவ்வாறு தன்னை மாற்றிக்கொண்டது என்பது குறித்து பேசினார். அவர் மேலும் பேசியதாவது: இன்னும் 2 ஆண்டுகளில் டாடா குழுமம் தன்னுடைய 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறது. குறிப்பாக கடந்த 25 வருடங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1990-களில் இந்தியாவின் முதல் பத்து நிறுவனங்களில் டாடா இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டும் முதல் பத்து இடங்களில் டாடா குழுமம் இருக்கிறது. 1990களில் இருந்த பல நிறுவனங்கள் இப்போது இல்லை. இந்த வளர்ச்சிக்கு ரத்தன் டாடா ஒரு முக்கிய காரணம்.

1991-ம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டுவந்த சமயத்தில்தான் டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்புக்கு ரத்தன் டாடா வந்தார்.

சந்தையில் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள உழைப்பு, புதுமை ஆகியவற்றை ரத்தன் டாடா கொடுத்தார். இதன் வளர்ச்சியாக பன்னாட்டு நிறுவனங் களுடன் இணைந்தது. குறிப்பாக ஹனிவெல், ஏஐஜி, ஐபிஎம், ஹிட்டாச்சி உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் கூட்டு வைத்து இணைந்து செயல்பட்டது. சர்வதேச அளவில் முக்கியமான குழுமமாக உருவெடுத்தது. அதே சமயத்தில் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட டாடா இண்டிகாவும் வெளியானது. அந்த சமயத்தில் அதிக முன்பதிவு (1,15,000 வாகனங்கள்) செய்யப்பட்ட வாகனம் இதுவாகும்.

புதுமைகள் மூலம் சமூகத்தின் நடுத்தர மக்களுக்கு பயன்படும் வகையில் டாடா நானோ, குறைந்தவிலை குடிநீர் சுத்திரிகரிப்பு சாதனம் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியது. டாடா குழுமம் தாஜ் ஓட்டல்களை நடத்தி வந்தாலும், நடுத்தர மக்களும் வசதியாக தங்கும் வகையில் ஜிஞ்சர் ஓட்டலையும் நடத்தி வருகிறது.

திறமையான நபர்களைக் கண்டு ணர்ந்து அவர்களுக்கு முக்கிய பொறுப்பு கள் வழங்கப்பட்டன. டாடா குழுமத்துக்குள் இருந்தும், வெளியில் இருந்தும் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இங்கிலாந்தை சேர்ந்த ஆலன் ராஸ்லிங் டாடா சன்ஸ் இயக்குநர் குழுவிலும், அமெரிக்காவை சேர்ந்த ரேமண்ட் பிக்சன் இந்தியன் ஓட்டல் தலைவராகவும், டாடா மோட்டார் மற்றும் டாடா டெலிசர்வீஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் வெளிநாட்டவர்கள் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

டாடா குழுமத்துக்கு சர்வதேச தலைவர்கள் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் முக்கியமான நிறுவனங்களையும் கையகப்படுத்தியது. முதலில் டெட்லி நிறுவனத்தை டாடா டீ வாங்கியது. அதனை தொடர்ந்து கொரியாவை சேர்ந்த டாவூ (Daewoo), கனடாவை சேர்ந்த டெலிகுளோப், சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் உள்ள நாட் ஸ்டீல், ஜெனரல் கெமிக்கல், ஜாகுவர், கோரஸ் என டாடா குழுமத்தின் நிறுவனங்கள் சர்வதேச அளவில் செயல்படும் முக்கிய நிறுவனங்களை கையகப்படுத்தியது. இந்த நிறுவனங்களை கையகப்படுத்தினாலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அந்த நாடுகளை சேர்ந்த குழுவே நிர்வாகம் செய்தது.

100-க்கும் மேற்பட்ட நாடுகளில் டாடா செயல்படுகிறது. இப்போது டாடா குழுமத்தின் மொத்த வருமானத்தில் 69 சதவீதம் இந்தியாவுக்கு வெளியில் இருந்து கிடைக்கிறது. இந்த அளவுக்கு வேறு எந்த நிறுவனத்துக்கும் வெளிநாடுகளில் இருந்து வருமானம் கிடைப்பதில்லை. ஆப்பிள், கூகுள், பிஅண்ட்ஜி, டொயோடா, ஜெனரல் எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்களுக்கு தங்களுடைய சொந்த நாட்டில் இருந்துதான் அதிக வருமானம் கிடைக்கிறது. இந்நிறுவனங்களின் மொத்த வருமானத்தில் வெளிநாட்டிலிருந்து கிடைப்பவை குறைவு. ஆனால் டாடா குழுமத்துக்கு 69 சதவீதம் வெளியில் இருந்து கிடைக்கிறது. 1996-ம் ஆண்டு குழுமத்தின் வருமானம் 600 கோடி டாலராக இருந்தது. 2015-ம் ஆண்டு 10,327 கோடி டாலராக இருக்கிறது.

பொதுவாக டாடா நிறுவனம் ஒரு தொழிலில் முதலீடு செய்தால், அதை விற்காது என்ற கருத்து நிலவுகிறது. நாங்கள் எடுக்கும் முடிவுகள் சமயங்களில் தவறலாம். அப்படி தவறும் போது நிறுவனங்களை விற்றிருக்கிறோம். ஏசிசி, லாக்மே, டாடா பிரஸ் டாடா ஆயில் மில்ஸ், ரீடர் டைஜிஸ்ட் உள்ளிட்ட 30 நிறுவனங்களை விற்றிருக்கிறோம். பங்குதாரர்களின் நலன், குறிப்பாக பணியாளர்கள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேபோல டாடா குழுமத்தில் தவறு நடக்கும் பட்சத்தில் உடனடியாக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். 2002-ம் ஆண்டு டாடா பைனான்ஸ் நிறுவனம் முறைகேட்டில் சிக்கியது. அப்போதைய நிர்வாகம் தவறான முடிவுகளை எடுத்தது. முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. டாடா பைனான்ஸில் முதலீடு செய்த ஒவ்வொரு முதலீட்டாளர்களுக் கும் முதலீடு செய்த தொகை திருப்பி கிடைக்கும் என டாடா சன்ஸ் உத்தர வாதம் அளித்தது. தவிர இந்த முறைகேட் டில் சிக்கிய அனைத்து நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

தற்போதைய டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ப டாடா குழுமம் மாறி அந்த துறைகளில் முதலீடு செய்து வருகிறது. கோபி கட்ரகடா என்பவர் தலைமை தொழில்நுட்ப அலுவலராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த நிதி ஆண்டில் மட்டும் 300 கோடி டாலர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

வெற்றியை நாங்கள் காலாண்டு அடிப் படையில் நாங்கள் முடிவு செய்வதில்லை. 2025-ம் ஆண்டுக்கு என்பதை இலக்காக வைத்து செயல்படுகிறோம். அப்போது உலகில் உள்ள 4 நபர்களில் ஒருவர் டாடா குழுமத்தை பயன்படுத்து பவராக இருப்பார் என முகுந்த் ராஜன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x