

வரிச் சலுகை ரத்து காரணமாக சாஃப்ட்வேர் பூங்காவிலிருந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளியேறத் தொடங்கியுள்ளன. சுமார் 1,000 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சாஃப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) எனப்படும் கூட்டமைப்பிலிருந்து தங்களது பதிவை விலக்கிக் கொண்டுள்ளன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 2012-ம் ஆண்டில் வருமானவரிச் சலுகை விலக்கப்பட்டது. இதனால் நிறுவனங்கள் தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளாமல் வெளியேறி வருவதாக எஸ்டிபிஐ இயக்குநர் ஓம்கார் ராய் தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு ரூ. 5 கோடி முதல் ரூ. 10 கோடி வரை ஏற்றுமதி செய்யும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வரிச் சலுகையானது மிகவும் உதவிகரமாக இருந்தது. இந்த நிலையில் வரிச் சலுகை திரும்பப் பெறப்பட்டுள்ளதால் அவை தொடர்ந்து எஸ்டிபிஐ பூங்காவிலிருந்து செயல்பட விரும்பவில்லை.
இதில் சில நிறுவனங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இடம்பெ யர்ந்து ள்ளன. ஏனெனில் அங்கு இப்போது சலுகை அளிக்கப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் இங்கு அளிக்கப்பட்டதைவிட கூடுதல் சலுகைகள் அங்கு அளிக்கப்படுகின்றன என்று அவர் கூறினார். இருப்பினும் தகவல் தொழில்நுட்பம் குறித்த அரசின் புதிய கொள்கை வரைவு வெளியானால் இந்த நிலை முற்றிலுமாக மாறும். நிறுவனங்கள் மீண்டும் எஸ்டிபிஐ நோக்கி வரத் தொடங்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய 200 புதிய நிறுவனங்கள் எஸ்டிபிஐ-யிடம் பதிவு செய்துள்ளன. வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார். எஸ்டிபிஐ-யில் ஒற்றைச் சாளர முறையில் லைசென்ஸ் வழங்கப்ப டுவதோடு, ஏற்றுமதிக்கான லைசென்ஸும் பெறப்பட்டு அளிக்கப்படுகிறது. இப்போது எஸ்டிபிஐ வசம் 4,000 நிறுவனங்கள் உள்ளன.
வரிச் சலுகை திரும்பப் பெறப்பட்ட போதிலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சாஃப்ட்வேர் ஏற்றுமதி ஆண்டுதோறும் 5 சதவீதம் அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
டாலர் கணக்கீட்டில் பார்த்தால் ஆண்டுக்கு 10 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. 2012-13-ம் நிதி ஆண்டில் சாஃப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 2.26 லட்சம் கோடியைத் தொட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார ரீதியான சலுகைகள் இல்லாமல் நடுத்தர மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் செயல்படுவது மிகவும் சிரமமாக உள்ளது. புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையானது புதிய பொருள் தயாரிப்பு, புதிய கண்டுபிடிப்பு, அறிவுசார் சொத்துரிமை மேம்படுத்தும் வகையில் இருக்கும் என்று அவர் கூறினார்.
தகவல் தொழில்நுட்பம் மூலமான வருவாயை அதிகரிக்கும் வகையில் புதிய கொள்கை இருக்கும். இப்போது 10,000 கோடி டாலராக உள்ள வருமானத்தை அடுத்த 7 ஆண்டுகளில் 30,000 கோடி டாலராக உயர்த்துவதே பிரதான நோக்கமாகும்.
அதேபோல இப்போது 6,900 கோடி டாலராக உள்ள ஏற்றுமதி வருமானத்தை 20,000 கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கை எட்டுவதற்கு வழி ஏற்படுத்தும் வகையில் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை இருக்கும் என்று அவர் கூறினார்.