Last Updated : 18 Feb, 2016 09:25 AM

 

Published : 18 Feb 2016 09:25 AM
Last Updated : 18 Feb 2016 09:25 AM

மத்திய பட்ஜெட்- 6. பஞ்சாய் பறக்குது பஞ்சாயத்து!

'ஐயா..., நம்ம பூங்கொடிக்கு எதாவது வேலை போட்டுக் குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.

'யாரு...? நம்ம ஐயாக்கண்ணுவோட பொண்ணா...?'

'ஆமாம்யா. பாவம், சோத்துக்கு வழி இல்லாம, குடும்பம் ரொம்ப கஷ்டப்படுது...'

'அடடா... நானும் அதைப் பத்தி யோசிக்கவே இல்லை பார்த்தியா...? சரி... நம்ம ஊரு ஆஸ்பத்திரியில ஆயாவா சேர்ந்துக்கச் சொல்லு. அப்புறம் பார்த்துக்கலாம்..'

ஊர் ‘தலைவரு' நினைத்தால் உதவ முடியும் என்று இருந்த காலம் அது.

'ஐயா' பூங்கொடியின் பையனும் பொண்ணும் பேரனும் பேத்தியும் ‘சௌகரியமாக' வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

'பேரன் அமெரிக்காவுல இருந்து ஃபோன் பண்ணான்யா... இப்பவும் உங்களைப் பத்திதான் சொல்லிக் கிட்டு இருந்தேன்..'

காது கேளாத முதியவர், ‘முன்னாள் தலைவரு' கையை மட்டும் உயர்த்தி ‘சந்தோஷம்' என்கிறார்.

இவையெல்லாம் நமது ஊரில் நம் கண்ணெதிரில் நடந்த உண்மைச் சம்பவங்கள்.

எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் பகல் கனவாய் மாறிப் போனது.

இன்று...? ஊருக்குத் தலைவர் என்பதெல்லாம் ‘பேருக்குத்தான்'.

இந்தியா முழுவதும் 2,38,617 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. (தமிழகத்தில் - 12,618) ஆனால்....

பொருளாதார ஆய்வறிக்கை, இரண்டு பாகங்கள்; 19 அத்தியாயங்கள்(10+9); என்று 283 பக்கங்களுக்கு நீள்கிறது. பஞ்சாயத்துகளைப் பற்றி எங்கே சொல்லப் பட்டிருக்கிறது தெரியுமா...?

தனியாக அத்தியாயம், தனித் தலைப்பு... ஊஹூம். அதெல்லாம் இல்லை.

பஞ்சாயத்துகளைப் பற்றி, ‘குறிப்பிடப்படுகிறது'. இருங்கள்... இருங்கள்.

இரண்டாவது பாகத்தில், கடைசி பக்கத்தில், கடைசி நான்கு வரிகளில்!!!

"நமது சுமைகளை, வாய்ப்புகளாக மாற்றுவதற்கான சவால் நம் முன் இருக்கிறது.

இந்த விருப்பத்தை மெய்யாக்குவதற்கு, பஞ்சாயத்துகள், உள்ளாட்சி அமைப்புகளை,

மாற்றத்தின் முகவர்களாகப் பயன்படுத்தி, மேற்கொள்ளப்படும்

'கீழிருந்து மேல்' என்கிற அணுகுமுறை, தற்போதைய தேவை ஆகும்."

கட்டக் கடைசி வரி. அதுவும் கூட எப்படி...?

'சத்தியமா ஒண்ணும் புரியலை' போன்ற ஒரு குறிப்பு.

ஒரு ஜனநாயக நாட்டில், அதிகாரம் என்பது, ‘மேலே' இருந்து கீழே வருவதாக இருத்தல் கூடாது.

அது ‘கீழே' இருந்து மேல் நோக்கிச் செல்வதாக இருக்க வேண்டும். புதிதாக ஒன்றும் இல்லை. மகாத்மா காந்தி சொன்னதுதான்.

நமது சாசனத்தின் உறுப்பு 40 - ‘அரசுக் கொள்கையின் வழிகாட்டு நெறிமுறைகள்' இப்படிச் சொல்கிறது: "கிராமப் பஞ்சாயத்துகள் தன்னிறைவு பெற்ற ஆட்சி அமைப்புகளாகச் செயல்படத் தேவையான அதிகாரங்கள், பொறுப்புகளை வழங்க, அரசு (தீர்மானமாக) நடவடிக்கை எடுக்கும்".

என்ன நடந்தது...? கடந்த சில பத்தாண்டுகளில், பஞ்சாயத்துகளின் சிறகுகள் பிய்த்து எறியப் பட்டன. சுயமாக செயல்படத் தேவையான நிதி, நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் அடியோடு நீக்கப்பட்டன.

மக்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிற, மக்களால் எளிதில் அணுக முடிகிற உள்ளாட்சி அமைப்புகள்தாம், மக்களின் எண்ணங்களுக்கு, எதிர்பார்ப்புகளுக்கு சரியான வடிகாலாக இருக்க முடியும்.

ஆனால் அவையோ, ‘திட்டம் போட்டு', வெறும் மண் பொம்மைகளாக மாற்றப்பட்டன.

அரசின் மூச்சுக் காற்று பட்டால் கூட, கரைந்து போகிற அளவுக்குத்தான் அதன் ‘வலிமை' இருக்கிறது.

வரவிருக்கும் 2016-17க்கான மத்திய பட்ஜெட்டில் தனக்கு என்னென்ன வேண்டும் என்று, பத்து நாட்களுக்கு முன்பு, ஒடிசா மாநிலம், மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைத்து இருக்கிறது.

தொழில் வரி, சரக்கு-சேவை வரி, கிழக்கு பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் என்று பலவற்றைப் பற்றியும் ‘விலாவாரியாக' பேசி இருக்கிற ஒடிசா அரசு, கிராமப்புற பொருளாதாரம், கிராம பஞ்சாயத்துகள் பற்றியும் ஒரு கோரிக்கை வைத்து இருக்கிறது. (ஆமாம்.. ஆமாம்; கட்டக் கடைசியாகத்தான்.)

அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள, 6,238 கிராமப் பஞ்சாயத்துகளில், 4,597இல், வங்கி வசதிகள் இன்னமும் முழுமை பெறவில்லை; இங்கெல்லாம் கிளைகளைத் திறக்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்; சில உள்ளடங்கிய கிராமங்களில் இணைய வசதி மேம்படுத்தப்பட வேண்டும்; அப்போதுதான் வங்கி கள் சிறந்த முறையில் சேவை செய்ய இயலும் என்றும், பட்ஜெட் தொடர்பான வேண்டுகோளில் முன் வைக்கப்பட்டு இருக்கிறது.

வேண்டுகோள் தவறு அல்ல. நியாயமானதும் கூட. அவசர அவசியமாகவும் இருக்கலாம்.

நம் வேதனை இதுதான்:

கிராமப் பஞ்சாயத்துகளை வலுவடையச் செய்யாமல்,

கிராமப் பொருளாதாரத்தை வளர்க்க திட்டம் இடுகிறார்களே... எப்படி சாத்தியம்..?

வங்கி வசதியும், ‘இண்டர்நெட்' தொடர்புகளும் எப்படிப் பிரசினைகளைத் தீர்க்கும்..?

பஞ்சாயத்துகளுக்குத் தேவையான நிதி வசதி உடனடியாக செய்து தரப்பட வேண்டும்.

மன்னிக்கவும். ஒரு கிராமத்தில் உடனடியாக, பொதுக் கழிப்பிடம் கட்ட வேண்டும் என்றாலும்,

திட்டத்தை சமர்ப்பித்து, ஒப்புதல் பெற்று, நிதி ஒதுக்கீடு வந்து, அனுமதிக்கப்பட்ட அளவுகளின் படியேதான் கட்டியாக வேண்டும்.

தலையில் கூடையை வைத்துக் கொண்டு கீரை, பூ, தயிர் விற்பவர்களிடம் இருந்து பெறும் ‘வரி வருமானம்' எதற்கு பயன்படும்..? இதை வைத்துக் கொண்டு, பஞ்சாயத்துப் பள்ளிகளில் தேவைப்படும் ‘சாக்பீஸ்' கூட வாங்க முடியாது.

பொருளாதார ஆய்வறிக்கை மட்டுமா..?

பட்ஜெட்டில் எங்களுக்கு இன்னது வேண்டும் என்று கேட்கும் யாராவது, பஞ்சாயத்துகளுக்கு என்று குறைந்தது ஒரு லட்சமாவது ஒதுக்குங்கள் என்று கேட்கிறார்களா..?

மிகப் பெரிய தலைவர்கள் முதல் கடைக் கோடி மனிதன் வரை எல்லாராலும் புறக்கணிக்கப்படுவதற்கு, என்ன பாவம் செய்தன கிராமப் பஞ்சாயத்துகள்..?

யோசித்துப் பாருங்களேன்...

ஓர் ஆண்டுக்கு, ஒரு பஞ்சாயத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் என்றால்,

இந்தியாவில் உள்ள அத்தனை பஞ்சாயத்துகளையும் சேர்த்து, சுமார் 2400 கோடி ரூபாய் ஆகிறது.

பெரிய தொகைதான். ஆனால் முடியாதது அல்ல.

ஒரு கிராமத்துக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இத் தொகை பெரிதும் உதவும். கிராமப் பஞ்சாயத்து எல்லைக்குள் மேற்கொள்ளப்படும் திட்டங்களில்,

அந்த அந்த பஞ்சாயத்துகளை ஈடுபடுத்த வேண்டும். இவற்றின் மூலம்தான், நிதி வழங்கப்பட வேண்டும்.

'நேரடிப் பணப் பரிவர்த்தனை' (Direct Cash Transfer) என்பது மிக நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய மிக நல்ல திட்டம். ஆனால் அது, ‘மேலே' இருந்து நேரடியாக என்பதாக அல்லாமல், பஞ்சாயத்துகள் மூலம் நேரடியாக என்று இருந்தால், ஜனநாயக அமைப்புகள் ஆழமாக வேரூன்ற பேருதவியாக இருக்கும்.

வரவிருக்கும் பொருளாதார ஆய்வறிக்கை, பட்ஜெட்டில் நம் எதிர்பார்ப்புகள் என்ன...?

அதற்கு முன், நிறைவாக ஒன்றைப் பார்த்து விடுவோம் - ‘மானியங்கள்'!

- வளரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x