Published : 22 Dec 2013 00:00 am

Updated : 06 Jun 2017 16:41 pm

 

Published : 22 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Jun 2017 04:41 PM

வரைபடங்களும் அறிவுக்கூர்மையும்

“பையன் படிக்க மாட்டே ங்கிறான். அட்டென்ஷன் டெஃபிசிட்டா இருக்குமோ?” என்று கேட்டார் அந்த சிறுவனின் தாய். மேல் நடுத்தர வர்கத்தின் ஆதார குணமான தேவையில்லாததை அரைகுறையாக படித்த குழப்பத்தின் விளைவு இது.

“புத்தகத்தை எடுத்தாலே தூங்கறான். ஒண்ணுமே மண்டையில ஏற மாட்டேங்குது!” என்று வெறுப்புடன் சொன்னார். “ஆனா டி.வி.ல பாட்டு போட்டா ஸ்டெப் மாறாம ஆடறான். எந்த காரைப் பாத்தாலும் அதைப்பத்தி அக்கு வேற ஆணி வேற லெக்ச்சர் அடிப்பான். இவன் இண்டெலிஜெண்டா இல்லையான்னே தெரியலை!”


துரதிஷ்டவசமாக, பள்ளி பரிட்சையில் வாங்கும் மதிப்பெண்தான் இங்கு மூளை வளர்ச்சியை நிர்ணயிக்கும் அளவுகோலாக இருக்கிறது.

நிஜமாகவே மூளை எப்படி வேலை செய்கிறது; அந்த மூளையிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்று பயன்படுத்துவோர் கையேடு (User’s Manual) ஒன்று இருந்தால் ?

இருக்கிறது. அதுதான் டோனி பூசன் தன் சகோதரனுடன் சேர்ந்து எழுதிய The Mindmap Book !

முதலில் மூளையின் செயல்பாட்டை ஒட்டிய சில கேள்விகள்:

இந்த பத்தியை படிப்பவர்களைவிட முன்பக்கத்தில் இருக்கும் சினிமா நடிகை படத்தைப் பார்ப்பவர்கள் அதிகம். ஏன்?

எவ்வளவு யோசித்து “என்ன செய்யலாம் (To do) “ லிஸ்ட் போட்டும் ஏதோ ஒன்று மறந்துவிடுகிறதே. ஏன்?

வகுப்பிலோ, மீட்டிங்கிலோ, கருத்தரங்கத்திலோ சிரத்தையாக எடுக்கும் நோட்ஸ் பெரும்பாலும் அரைகுறையாக, காலம் கடந்து பார்த்தால் புரியாமல் இருக்கிறதே? ஏன்?

செய்யுள் ஒரு வருடம் படித்தும் மனதில் நிற்பதில்லை. அதையே ஒரு சினிமா பாடலை ஒரு முறை கேட்கையிலேயே மனதில் ஒட்டிக்கொள்கிறதே? ஏன்?

சிலரால் புத்தகத்தை வேக வேகமாகப் படிக்க முடிகிறது. சிலர் மிக மெதுவாக படித்தும் புரிந்து கொள்ளத் தவிக்கின்றனர். ஏன்?

விடைகள் விரிவாக புத்தகத்தில் உள்ளது.

எந்த வசவும் மூளையை தொடர்பு படுத்தாமல் சொல்லப்படுவதில்லை. மூளை இருக்கா? அறிவிருக்கா? புத்தி இல்ல? முட்டாள்! மூளையை யூஸ் பண்ற வேலையே இல்ல. மூளையே இல்ல. மேல் மாடி காலி. இப்படி நிறைய...! (இதன் உளவியல் பாதிப்பை மூடர் கூடம் திரைப்படம் மிக அற்புதமாக்க காட்டியிருந்தது) ஒரு குழந்தைக்கு முதல் 6 வருடங்களில் பெற்றோர்களிடமிருந்து கிடைப்பது 80 சதவீதம் எதிர்மறை வார்த்தைகளே என்றால் நம்புவீர்களா?

இப்படி மூளை பற்றியும் அறிவு பற்றியும் இவ்வளவு வன்முறை உள்ள நிலையில், மூளை பற்றி சாமானியர் படிக்க ஒரு புத்தகம் தேவைப்படுகிறது. தி மைண்ட் மேப் புக் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்கிறது.

இனி யாராவது மூளை இருக்கா என்று கேட்டால் ஒன்றல்ல இரண்டு உள்ளது என்று சொல்லுங்கள். இடது மூளை வலது மூளை என பிளவுபடுத்தி அதன் தனிப்பண்புகளை பட்டியல் இடுகின்றனர்.

வார்த்தைகள், தர்க்கம், எண்கள், வரிசை, பகுப்பாய்வு இவை எல்லாம் இடது மூளையின் வேலைகள்.

உடல் மொழி, வண்ணம், இசை, உள் உணர்வு, கற்பனை, புலனாய்வு, ஒட்டுமொத்த புரிதல் இவை வலது மூளையின் வேலைகள்.

நம் கல்விமுறை முழுக்க முழுக்க இடது மூளை சார்ந்தது என்பது சாதாரணப் பார்வைக்கேத் தெரியும். வார்த்தை சார்ந்த மொழி எழுதுதல், கணக்கு போடுதல், உடைத்துப் பார்க்கும் பகுப்பாய்வு இவைதான் பள்ளி முதல் உயர் கல்வி வரை இங்கு. அதனால் தான் இந்த கல்வி முறையில் தோற்றும் வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் அதிகம்.

இருபக்க மூளைகளின் செயல்பாட்டையும் இணைக்கும் மிக எளிமையான யுத்தி மைண்ட்மேப்.

மைண்ட்மேப் என்று பூசன் கூறும் யுத்தி மிக சுலபமானது. ஒரு மையக்கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை படமாக வரையப்பாருங்கள். அதன் 360 டிகிரியிலும் கோடுகள் போடுங்கள். ஒவ்வொரு சிந்தனையையும் ஒவ்வொரு கோட்டில் ஒரு மைய வார்த்தையில் வெளிப்படுத்துங்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் 360 டிகிரியிலும் கோடுகள் போடுங்கள்.

மீண்டும் இதை போல தொடருங்கள். எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். எங்கு வேண்டுமானாலும் தொடரலாம். எப்படி வேண்டுமாலும் வெளிப்படுத்தலாம். வண்ணம், வடிவம், மொழி, எண்கள், உவமை என எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம். நீக்கலாம். எடுத்த மைண்ட் மேப்பை பிறகு எப்போது வேண்டுமானாலும் தொடரலாம். முடிக்கலாம்.

உதாரணத்திற்கு, இன்று ஒரு "என்ன செய்ய" லிஸ்ட் போடனும். வரிசையாக போட்டால் 10-ஐத் தாண்டினாலே நிறைய வேலை செய்யும் எண்ணம் வந்துவிடும். நிறுத்தி விடுவோம். மைண்ட் மேப் போடுங்கள்.

Things to do மையக்கருத்து. 360 டிகிரியில் சுற்றிலும் ரெவ்யூ மீட்டிங், கஸ்டமர் மீட்டிங், ஆதார் கார்ட், பாப்பாவின் ஸ்கூல் ஃபீஸ், புது வருஷ பார்ட்டி என்பதெல்லாம் உப கருத்துக்கள்.

அதில் ரெவ்யூ மீட்டிங் என்று எடுத்தால் 360 டிகிரியிலும் அடுத்த அடுக்கு கருத்துக்கள் (சென்ற ரெவ்யூ முடிவுகள், கம்ெபனி நிலவரம், புதிய ரெவ்யூ அளவீடுகள் அறிமுகம் இப்படி). இதில் கம்பனி நிலவரம் என்று ஒன்றை எடுத்தால் அடுத்த அடுக்கு.

பின்னர் சாவகாசமாய் முதல் அடுக்கில் புது வருஷ பார்ட்டி என வரைய ஆரம்பிக்கலாம். மூளையின் நியூராங்களின் கட்டுமானமும், எம்.எல்.எம். என்று சொல்லப்படும் Multi Level Marketing கட்டுமானமும் மைண்ட் மேப்பின் கட்டுமானத்துடன் ஒப்பிட்டு சொல்லலாம்.

ஒரு நவீன ஓவியம் போல முதலில் குழப்பமாகத் தோன்றும் இந்த மன வரைபடம் 100% உங்கள் நினைவில் நிற்கும். தேவைப்பட்ட அத்தனை விஷயங்களையும் ஞாபகம் வைத்துக் கொள்ள உதவும்.

இதன் பயன்கள் எந்த விஷயத்தையும் திறமையாக வேகமாக நோட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். நல்ல திட்டமிடல் கருவி இது. அருமையான படைப்பாற்றல் முறை இது. கற்றல் கோளாறு உள்ளவர்களை குணப்படுத்தும் என்கிறார் பூசன்.

என் பள்ளி சார்ந்த கருத்தரங்குகளுக்கு நான் தவறாது மைன்ட்மேப் பயன்படுத்துவேன். நிர்வாகங்களுக்கு, தேவையை பொறுத்து பயன்படுத்துவேன்.

கார்ப்பரேட்கள் அனேகம் பேர் எளிதில் புரிந்து கொள்வார்கள். ஆனால் செய்ய சிரமப்படுவார்கள். பள்ளி மாணவர்கள் புரிந்துகொள்ள மெனக்கெடுவார்கள். ஆனால் பிரமாதமாய் செய்வார்கள். ஒவ்வொன்றும் அற்புத கலைப்படைப்பாய் தெரியும். ஒரு முறை ஒரு பையன் தன் கெமிஸ்ட்ரி சிலபஸ் மொத்தத்தையும் ஒரு மைண்ட் மேப் ஆக்கிக் காட்டினான்.

ஒரு குழுவாக்கப் பயிற்சியில் 20 பேர் சேர்ந்து 6 அடிக்கு 8 அடி என்ற அளவில் ஒரு மைண்ட் மேப் செய்தார்கள் ஊட்டி குளிரில். அடுத்த 5 ஆண்டுகளில் என்ன செய்யனும் என்று திட்டமிட்டார்கள்.

ஒரு பிரபல ஆங்கில வார இதழ் ஆசிரியர் குழுவிற்கு படைப்புத்திறன் பற்றி பயிற்சி எடுக்கையில் அவர்கள் மொத்தக் குழுவும் சேர்ந்து ஒரே A4 பேப்பரில் ஒரு கலைப்படைப்பை உருவாக்கியது இன்னொரு பரிணாமம். அவர்கள் தங்களை விமர்சனம் செய்து கொண்டார்கள்!

யாருக்கு இந்த புத்தகம் அவசியம்? மாணவர், ஆசிரியர், மேலாளர்... என எந்தத் துறையாக இருந்தால் என்ன, மூளை உள்ளவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் இது. இதை வியாபாரம், அறிவியல், கல்வி என பல பகுதிகளில் புத்தக்கடைகளில் காணலாம். ஏன் இது Best Seller என படிக்கையில் புரிகிறது.

இயற்கையின் ஒவ்வொரு அங்கமும் (மரம், மின்னல் பூமி இப்படி) மைண்ட் மேப் வடிவிலேயே இருப்பதை புத்தகத்தின் அழகான படங்கள் தெரிவிக்கிறது. வழுப்பான பக்கங்களும், வண்ணப்படங்களும், பெரிய எழுத்துக்களும், ஏராளமான மைண்ட் மேப்களும் இதை ஒரு குழந்தைகள் புத்தகம் போல நம்மை குதூகலமாக படிக்க வைக்கிறது.

நாமும் குழந்தைகள் தானே? என்ன… சற்று வளர்ந்த குழந்தைகள்!!

டாக்டர் ஆர். கார்த்திகேயன் - gemba.karthikeyan@gmail.com


கார்ப்பரேட்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x