Published : 19 Jun 2016 10:13 AM
Last Updated : 19 Jun 2016 10:13 AM

கடன் பாக்கி தொகையை கடன்தாரரின் சேமிப்பு கணக்கில் இருந்து எடுக்கலாம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடனை கட்டத் தவறும் கடன் தாரரின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை கடன் கணக்கில் வரவு வைக்கலாம் என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தஞ்சாவூர் பூக்கொல்லையை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய வர்த்தக ஆய்வாளர் நடராஜன். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், எனது விவசாய நிலத்தில் போர்வெல் அமைப்பதற்காக பூக்கொல்லையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நானும், என் மகனும் சேர்ந்து 2012-ல் ரூ.75 ஆயிரம் விவசாயக் கடன் பெற்றேன். விதிப்படி முதல் 2 ஆண்டில் கடனை திரும்பச் செலுத்த வேண்டாம். அதன் பிறகு 10 மாத தவணைகளில் கடனை திரும்பச் செலுத்த வேண்டும். விவசாயம் பொய்த்துப்போனதால் கடனை திரும்பச் செலுத்த முடியவில்லை. இந்நிலையில் அதே வங்கியில் உள்ள எனது சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும் எனது ஓய்வூதியத் தொகையை விவசாயக் கடனுக்கு பிடித்தம் செய்துவருகின்றனர்.

என் குடும்பம் எனது ஓய்வூ தியத்தை நம்பியே உள்ளது. இதனால் விவசாய கடனுக்காக எனது சேமிப்பு கணக்கில் செலுத்தப் படும் ஓய்வூதியத்தை பிடித்தம் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எம்.வேணுகோபால் பிறப் பித்த உத்தரவு:

கடன் பெறும்போது மனுதாரர் அளித்த உறுதிமொழி அடிப் படையில் அவரது சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை கடனுக்காக எடுத்துக்கொள்வதற்கு வங்கி நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது. கடனை திரும்பச் செலுத்துமாறு வங்கியில் இருந்து பல்வேறு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதன் பிறகும் கடன் திரும்ப செலுத்தப் படவில்லை.

அந்தக்கடன் வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிலையில் வேறு வழியில்லாமல் வங்கிக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க மனுதாரரின் சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. கடனை திரும்பச் செலுத்துவதில் தங்களின் கஷ்டங்களை கூறி தப்பிக்க முடியாது. கடனை திரும்பச் செலுத்த தவறும் போது கருணை காட்ட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x