Published : 01 Apr 2014 12:17 PM
Last Updated : 01 Apr 2014 12:17 PM

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

கடனுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவில்லை. இதனால் குறுகிய கால கடனுக்கான வட்டி (ரெபோ) விகிதம் தொடர்ந்து 8 சதவீதமாக இருக்கும்.

(ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் கடன் வாங்கும் விகிதம் ரெபோ எனப்படும்.)

இதேபோல வங்கிகள் தங்களிடம் கூடுதலாக உள்ள இருப்புத் தொகையை ரிசர்வ் வங்கிக்கு அளிப்பது ரிவர்ஸ் ரெபோ ரேட் எனப்படும்.

இதற்கான வட்டி விகிதம் தற்போது 7 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித் துள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையை அதன் கவர்னர் ரகுராம் ராஜன் வெளியிட்டார். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டுவது என்ற முடிவின்படி முதலாவது கூட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

இதில் பணவீக்கத்தைக் கட்டுக் குள் வைப்பதற்காக ரெபோ விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

ரொக்கக் கையிருப்பு விகிதம்

வங்கிகள் தங்களது ரொக்கக் கையிருப்பு விகிதமாக 4 சதவீதத்தை பரமாரிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

இதில் முந்தைய நிலையே தொடர்கிறது. இதேபோல மார்ஜினல் ஸ்டாண்டிங் ஃபெசிலிட்டி (எம்.எஸ்.எஃப்) வட்டி விகித நிலை தொடர்ந்து எவ்வித மாற்றமும் இன்றி 9 சதவீதத்திலேயே தொடரும்.

வீட்டுக் கடன்

வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லாததால் வீட்டுக் கடன், வாகனக் கடன்களுக்காக செலுத்தும் மாதாந்திர சுலபத் தவணை (இஎம்ஐ) எவ்வித மாற்றமும் இன்றி தொடரும்.

கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி, ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதிக் கொள்கையில் ரெபோ விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டது. தற்போது இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடனுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாறுதலையும் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளாது என வங்கியாளர்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். பணவீக் கத்தைக் கட்டுக்குள் வைப்பது மற்றும் எதிர்வரும் மக்களவைத் தேர்தல் ஆகிய காரணங்களால் எவ்வித மாறுதலையும் ஆர்பிஐ மேற்கொள்ளாது என குறிப்பிட்டிருந்தனர். அதை நிரூபிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், வட்டி விகிதத்தில் எவ்வித மாறுதலையும் செய்யவில்லை.

2015-ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்காக ரிசர்வ் வங்கி வட்டிக் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று தெரிகிறது.

ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக் கொள்கை அறிவிப்பு ஜூன் 3-ம் தேதி வெளியாகும்.

வங்கி லைசென்ஸ்

நிறுவனங்கள் வங்கி தொடங்குவதற்கு லைசென்ஸ் வழங்குவதற்கும் அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

வங்கி தொடங்க லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு வெவ்வேறு கருத்துகள் இருக்கும். ஆனால் ரிசர்வ் வங்கியைப் பொறுத்தமட்டில் லைசென்ஸ் வழங்குவது என்பது மட்டும்தான் பிரதானமானதாகும்.

வங்கி தொடங்குவற்கு லைசென்ஸ் கோரி விண்ணப் பித்துள்ள நிறுவனங்களைப் பற்றிய புலனாய்வு தகவல்களைத் திரட்டுவதில்தான் கால தாமதமானது. பிப்ரவரி 25-ம் தேதிதான் கிடைத்தது. லைசென்ஸ் வழங்குவது தொடர்பான அனைத்து பணிகளும் நிறைவடைவதற்குள் தேர்தல் குறித்த அறிவிக்கை வெளியானது. இது குறித்து தேர்தல் ஆணையத்துடன் விவாதிப் பதற்கான கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுவதாயிருந்தது. அது தவிர்க்க முடியாத சூழலி்ல் ஒத்திப் போடப்பட்டது. வங்கி தொடங்க லைசென்ஸ் கோரி அனில் அம்பானி குழுமம், ஆதித்ய பிர்லா குழுமம், முத்தூட் ஃபைனான்ஸ், ரெலிகரே என்டர்பிரைசஸ் உள்ளிட்ட 27 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

கடந்த 20 ஆண்டுகளில் 12 தனியார் வங்கிகள் தொடங்கப் பட்டுள்ளன. கடைசியாக கோடக் மஹிந்திரா, யெஸ் வங்கி ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

முக்கிய அம்சங்கள்

* ரொக்கக் கையிருப்பு விகிதத்தில் (சிஆர்ஆர்) மாற்றமில்லை. ரெபோ விகிதம் 4% நிலையே தொடரும்.

* 2014-15-ம் நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் 5.50% ஆக நிர்ணயம்

* 2013-14-ம் நிதி ஆண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (சிஏடி) 2% ஆக குறையும் என எதிர்பார்ப்பு

* 2014-ல் சில்லறை வர்த்தக பணவீக்கம் 6% கீழாக இருக்கும்

* குறைந்தபட்ச தொகை இல்லாத வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என வங்கிகளுக்கு உத்தரவு

* தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பிறகு புதிய வங்கிகளுக்கு அனுமதி

* அந்நிய முதலீட்டாளர்கள் தங்களுடைய ‘கரன்ஸி ரிஸ்க்கை’ குறைப்பதற்கு ‘ஹெட்ஜிங்’ செய்ய ரிசர்வ் வங்கி அனுமதித்திருக்கிறது.

சந்திரஜித் பானர்ஜி, சிஐஐ டைரக்டர் ஜெனரல்.: பணவீக்கம் குறைந்துவரும் சூழ்நிலையி்ல் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடுவதுதான் ரிசர்வ் வங்கியின் பிரதான நோக்கமாக இப்போது இருக்கவேண்டும். மாறாக வட்டியைக் குறைக்காமலிருப்பது ஏமாற்றமளிக்கிறது

ராணா கபூர், அசோசேம் தலைவர்: வட்டி விகிதத்தை குறைத்து வளர்ச்சியை அதிகரிக்கவும், முதலீட்டாளர் மனநிலையை ஊக்குவிக்கவும் ரிசர்வ் வங்கிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை ஆர்பிஐ செய்யத் தவறிவிட்டது.

சித்தார்த் பிர்லா, ஃபிக்கி தலைவர்: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமே ஒருங்கிணைந்த அணுகுமுறையாக இருக்க முடியாது. பொருளாதார வளர்ச்சியையும் ஆர்பிஐ கருத்தில் கொள்ள வேண்டும். தொழில்துறையினர் வட்டிக் குறைப்பை நம்பித்தான் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x