Last Updated : 17 Aug, 2016 11:05 AM

 

Published : 17 Aug 2016 11:05 AM
Last Updated : 17 Aug 2016 11:05 AM

பொதுத்துறை வங்கிகளில் அரசு, ரிசர்வ் வங்கி குறுக்கீடு கூடாது: ரகுராம் ராஜன் கருத்து

பொதுத்துறை வங்கிகள் சிறப்பாக செயல்பட வேண்டுமானால் அதில் அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் தலையீடு இருக்கக் கூடாது என்று ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் குறிப்பிட்டார்.

மும்பையில் நடைபெற்ற வங்கி யாளர்கள் மாநாட்டில் பேசிய அவர், வங்கிகள் தங்களது இயக்குநர் குழுவை வலிமைமிக்கதாக ஆக்க வேண்டும். அது தன்னாட்சி மிக்க அமைப்பாக, சுயமாக செயல்படும் அமைப்பாக, சுதந்திரமாக செயல் படும் வகையில் இருக்க வேண்டும். மேலிடத்தில் உள்ளவர்களை திருப்திபடுத்தும் அமைப்பாக செயல்படக் கூடாது என்றார். அவர் மேலும் பேசியதாவது:

வங்கிகளின் செயல்பாடுகளில் அரசு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளின தலையீடு இருக்கக் கூடாது. மேலும் ரிசர்வ் வங்கி தலையீடும் இதில் உள்ளடங்கியதே. வங்கிகளின் இயக்குநர் குழுவில் ரிசர்வ் வங்கி பிரதிநிதிகள் இடம்பெறுவது படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.

தற்போது பன்முக நிர்வாக அமைப்புகள் வங்கிகளின் செயல் பாடுகளை தீர்மானிக்கின்றன. நாடாளுமன்றம், நிதிச் சேவைகள் துறை, வங்கி இயக்குநர் குழு நிர்வாக அமைப்பு, வங்கிகளின் இயக்குநர் குழு, கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் இவை தவிர பல்வேறு கட்டுப்பாட்டு அமைப்புகள் அவற்றின் கண் காணிப்பாளர்கள் உள்ளிட்டவை பொதுத்துறை வங்கிகளின் செயல் பாடுகளைக் கண்காணிக்கின்றன.

இதுபோன்ற பலரை திருப்தி படுத்தும் நோக்கிலான அமைப்பு களையும் மீறி வங்கிகளை நிர்வகிக்க எப்படி நேரம் இருக்கும்.

வங்கிகளை கண்காணிக்கும் பன்முக அடுக்குகள் படிப்படியாக விலக்கப்பட வேண்டும். அதிகாரி களின் எல்லை வகுக்கப்பட வேண் டும். ஒருவருக்கு எந்த பணி என்பது தீர்மானமாக வரையறுக்கப்பட வேண்டும்.

தலைமை கணக்கு தணிக்கை (சிஏஜி) மற்றும் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் (சிவிசி) ஆகியன அசாதாரணமான சூழலில்தான் வங்கிகளின் நடவடிக்கைகளில் தலையிட வேண்டும். வெறுமனே அன்றாட அலுவல் பணிகளில் தலையிடுவது தேவையற்றது.

ரிசர்வ் வங்கியைப் பொறுத்த மட்டில் நிர்வாக நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். வங்கிகளில் ஆர்பிஐ பிரதிநிதிகள் நியமனம் தேவையற்றது. இத்தகைய மாற்றம் கொண்டு வர சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது.

வங்கிகளின் இயக்குநர் குழுவுக்கு முழு அதிகாரம் அளிக்க வேண்டும். சிறிய விஷயங்களுக்குக் கூட அனுமதி பெற வேண்டும் என்ற நிலை மாற வேண்டும்.

வங்கி இயக்குநர் குழு முழுவதும் தொழில்முறை வங்கியாளர்களைக் கொண்டதாக மாறவேண்டும். இதனால் வங்கி செயல்பாடு மற்றும் நிர்வாக நடைமுறைகள் மேம்படும். அத்துடன் வங்கிகள் தாங்களாகவே சுதந்திரமாக நியமனங்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.

வங்கிகளில் காலியாக உள்ள முக்கியமான பணியிடங்களை நிரப்ப நீதிமன்றமும் அரசும் அனுமதிக்க வேண்டும். பல வங்கிகளில் பணியாளர்கள் ஓய்வு பெற்றதால் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. திட்ட மதிப்பீட்டாளர், ஐடி தொழில் நுட்பத் துறையினர், சைபர் பாது காப்பு உள்ளிட்ட பிரிவுகளில் திறமையானவர்களை தேவைப் படும்போது நியமிக்க அனுமதிக்க வேண்டும்.

திறமையானவர்களை உயர் பதவியில் நியமிப்பதால், வங்கிப் பணியாளர்களிடையே கருத்து வேறுபாடு உருவாகும் என்பதால் பல வங்கிகள் வெளியிலிருந்து உயர் பதவி நியமனத்தில் தயக்கம் காட்டுகின்றன. நீதி மன்றமும் இவ்விதம் நியமிக்க தடை விதித்துள்ளது. ஆனால் அவசியமான பதவிகளுக்கு இத்தகைய தடை அவசியமில்லை என்று ராஜன் குறிப்பிட்டார்.

‘எனக்கே குறைவான ஊதியம்தான்’

ரிசர்வ் வங்கி கவர்னராக உள்ள தமக்கே குறைவான ஊதியம்தான் வழங்கப்படுவதாக ராஜன் குறிப்பிட்டார். வங்கிகளின் ஊதிய விகிதத்தில் மிகப் பெரிய ஏற்றத் தாழ்வு காணப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

கீழ்நிலை பணியாளர்கள் அதிக ஊதியமும், உயர் நிலையில் உள்ளவர்கள் குறைவான ஊதியமும், அதாவது அவர்களது திறமைக்கேற்ற ஊதியமும் பெறாத நிலைதான் உள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் உயர் பதவி நியமனத்தை வங்கிப் பணியாளர் வாரியம் (பிபிபி) தீர்மானிக்கிறது. இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுப்பது அரசுதான். மேலும் அமைச்சரவையின் பணியாளர் நியமன குழு இந்த விஷயத்தில் சிறப்பாக செயலாற்ற முடியும் என்றார்.

ஊதிய வேறுபாடு காரணமாகத்தான் பொதுத்துறை வங்கிகளின் தலைமை பதவியில் திறமையானவர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்றார் ராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x