

அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஏல விலையை 10 சதவீதம் உயர்த்தி நிர்ணயிக்கலாம் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதன்படி 2ஜி அலைக்கற்றை ஏலத்தொகை 1800 மெஹா ஹெர்ட்ஸ் பேண்ட் அடிப்படை விலையாக ஒவ்வொரு மெஹா ஹெர்ட்ஸுக்கு ரூ. 2,138 கோடியாக நிர்ணயிக்கலாம் என தெரிவித்துள்ளது. இதேபோல பிரீமியம் அலைக் கற்றையான 900 மெஹாஹெர்ட்ஸ் பேண்ட் அடிப்படை விலையாக ஒரு மெஹாஹெர்ட்ஸுக்கு ரூ. 3,004 கோடியை நிர்ணயிக்கலாம் என தெரிவித்துள்ளது. 1800 மெஹாஹெர்ட்ஸ் அலைக்கற்றை செயல்திறனைவிட இது பல மடங்கு சிறந்ததாகும்.
செல் நிறுவனங்கள் அதிக அளவில் டேட்டா பரிமாற்றத்துக்கு அலைக்கற்றையை பயன்படுத்து வதால் விலையை உயர்த்தி நிர்ணயிக்கலாம் என டிராய் குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே அலைக்கற்றை யைப் பயன் படுத்தும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை யை தொடர்ந்து அளிக்க வசதி யாக அலைக்கற்றை ஏலத்தை கெடு தேதிக்கு முன்பாக நடத்தி முடிக்கும்படி அதாவது பிப்ரவரி 2015-க்குள் நடத்தும்படி பரிந்து ரைத்துள்ளது.
2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அலைக்கற்றை ஏலம் நடத்தப்பட்டபோது குறைந்தபட்ச தொகைக்கு ஏலம் கேட்கப்பட்ட தொகையின் அடிப்படையில் அடுத்த ஆண்டுக்கான ஏலத் தொகையின் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஏல கேட்புத் தொகை ரூ. 2,270.4 கோடிக்கு 1800 மெஹாஹெர்ட்ஸ் பேண்ட் ஏலம் போனது.
ஹரியாணா, மகாராஷ்டிரம் பகுதியில் அலைக்கற்றை முழு அளவில் அமைக்கப்படாததால் அங்கு ஏலம் நடத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. செல்போன் உபயோகம் மற்றும் இணையதள உபயோகம் அதிகரித்திருப்பதையும் கருத்தில் கொண்டு ஏலத் தொகை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
900 மெஹாஹெர்ட்ஸ் பேண்ட் அலைக்கற்றை பிரிவில் ஒரு மெஹாஹெர்ட்ஸ் ரூ. 3,004 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 22 டெலிகாம் பகுதியில் 18 இடங்களில் இந்த அலைக்கற்றை கிடைக்கிறது. ஜம்மு காஷ்மீர், டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய பகுதிகளில் இந்த சேவை கிடைப்பதில்லை.
ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலர், ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் லைசென்ஸ் 2015-16-ம் நிதி ஆண்டில் காலாவதியாகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் தொலைத் தொடர்புத் துறையில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் இப்பகுதியில் அலைக் கற்றை ஒதுக்கீட்டுக்கான விலையை அடிப்படை விலையைவிட 50 சதவீதம் குறைவாக நிர்ண யிக்கலாம் என்றும் டிராய் பரிந்து ரைத்துள்ளது.