

நாட்டின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா (எம்எஸ்ஐ), ஸ்டீரிங் பிரச்னை காரணமாக 1,492 கார்களை திரும்பப் பெறுவதாக இன்று அறிவித்தது.
இதுதொடர்பாக எம்.எஸ்.ஐ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த அக்டோபர் 19 முதல் 26-ம் தேதி வரையில் தயாரிக்கப்பட்ட எர்டிகா (306), ஸ்விப்ட் (592), டிசையர் (581) மற்றும் ஏ-ஸ்டார் (13) ஆகிய கார்களின் ஸ்டீரிங்கில் பிரச்னை இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட கார்களை சம்பந்தப்பட்ட விநியோகஸ்தரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அந்த கார்களை ஆய்வு செய்து, ஸ்டீரிங்கில் பழுது இருந்தால், கட்டணம் எதுவுமின்றி மாற்றித் தரப்படும் என எம்எஸ்ஐ தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எரிபொருள் பம்ப் பிரச்னை காரணமாக 1 லட்சம் ஏ-ஸ்டார் மாடல் கார்களை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.