

ஸ்டேஸில்லா நிறுவனத்தின் நிறு வனர் யோகேந்திர வசுபால் கடந்த 14-ம் தேதி சென்னையில் கைது செய்யப்பட்டார். இவரது கைதுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொழில் துறை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். சட்டத்தை மீறி யாரும் செயல்பட முடியாது என கர்நாடக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங் கார்கே தெரிவித்தார்.
மார்ச் 15-ம் தேதி ட்விட்டர் வலை தளத்தில் யோகேந்திர வசுபாலுக்கு ஆதரவான கருத்தினை அமைச்சர் தெரிவித்திருந்தார். அதில் `இந்த விஷயத்தில் தலையிட தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் மணிகண்டனிடம் பேசி னேன். சட்டத்தின்படி வசுபால் பக்கம் நியாயம் இருந்தால் அவர் (மணி கண்டன்) நிச்சயம் உதவுவார்’ என ட்விட்டரில் கருத்து தெரிவித் திருந்தார்.
இந்த நிலையில் சட்டத்தின் முன்பாக அனைவரும் சமம் என கார்கே கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: அரசாங்கத்தின் பிரதிநிதியாக தொழில்முனைவினை மட்டுமே ஆதரிக்க முடியும். ஜிக்சா நிறுவனத்துக்கோ அல்லது ஸ்டேஸில்லா நிறுவனத்துக்கோ ஆதரவாக பேச முடியாது.
முன்பு நான் ட்விட்டரில் வசுபாலுக்கு ஆதரவாகவோ, ஜிக்சா நிறுவனத்துக்கு எதிராகவோ பேசவில்லை. வசுபால் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் உதவி செய்ய முயற்சிக்கிறேன் என்று மட்டுமே கூறியிருந்தேன். ஒருவருக்கு சாதகமாகவோ மற்றவருக்கு எதிராகவோ நிலைபாடு எடுக்க முடியாது.
ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றால் கொடுத்துதான் ஆகவேண்டும். என்னால் கொடுக்க முடியாது என்று கூறமுடியாது. நான் ஸ்டார்ட் அப் நிறுவனம் என்பதால் விடுவிக்க முடியாது. அப்படி செய்வது விஜய் மல்லையாவை ஆதரிப்பது போன்ற செயலாகும். ஒருவர் சரியாக இருக்கும் பட்சத்தில், அவருக்குத் தேவையான நீதியை வழங்குவதை உறுதி செய்யலாம்.
ஸ்டேஸில்லா போன்ற ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையால் ஒட்டு மொத்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பிரச்சினை என்பதை ஏற்க முடியாது. புதுமையான யோசனைகள் எதையும் தடுக்க முடியாது என கார்கே தெரிவித்தார்.