

இணையதளம் மூலமான ஆன்லைன் வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களும் இனி ஈடுபட உள்ளன. அமேசான், இ-பே உள்ளிட்ட நிறுவனங்களை அனுமதிப்பதற்கான வரைவுத் திட்டம் தயாராகிறது. அன்னிய நேரடி முதலீட்டு (எஃப்டிஐ) கொள்கை வகுக்கும் துறை, மின்னணு வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதற்கான வரைவைத் தயாரித்து வருகிறது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள தொழில்துறை மற்றும் நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறது.
இந்தியாவில் செயல்படும் ஃபிலிப்கார்ட் மற்றும் மைன்ட்ரா உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்த வெளிநாட்டு நிதியை நாடுகின்றன. அதேசமயம் அமேசான் மற்றும் இ-பே உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் தடம் பதிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இது தொடர்பாக எத்தகைய வழிமுறைகளை வகுப்பது என்பதற்காக தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை (டிஐபிபி) செயலர் சௌரவ் சந்த்ரா, தகவல் தொழில்நுட்பத்துறையின் உயர் அமைப்பான நாஸ்காம் தலைவர் சோம் மித்தலுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
மின்னணு சார்ந்த ஆன்லைன் வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இதுவரை இந்தியாவில் அனுமதி அளிக்கப்படவில்லை. இத்தகைய வெளிநாட்டு நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வது தொடர்பான வழிகாட்டுதலைக் கண்டறிந்து அதற்கான சாதக, பாதக அம்சங்களை ஆராயுமாறு பிரதமர் அலுவலகம் சமீபத்தில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தைக் கேட்டுக் கொண்டது.
மின்னணு வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. இதனால் அமெரிக்காவின் அமேசான் மற்றும் இ-பே நிறுவனங்கள் தங்களது சந்தை வாய்ப்புகளை இந்தியாவில் வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும்.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் இம்மாத இறுதியில் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் டிஐபிபி துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி அதன் முடிவை மத்திய அமைச்சரவை முடிவுக்கு அனுப்பி வைப்பர் இதனடிப்படையில் முடிவு எடுக்கப்படும். இருப்பினும் இத்தகைய முடிவுக்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவைப்படுவதால் இது செயல்பட சில காலம் பிடிக்கும் என்றே தோன்றுகிறது.