

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வேண்டுமென்றால் வடகிழக்கு மாநிலங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா வலியுறுத்தினார்.
தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய வடகிழக்கு மாநில திருவிழாவைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:
நாட்டின் வட மாநிலங்களுடன் வடகிழக்கு மாநிலங்களை இணைப்பதற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இப்பிராந்தியத்தை மேம்படுத்தினால் ஆசியாவின் கிழக்குப் பகுதி ஏற்றுமதி மேம்பாடு அடையும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இப்பிராந்தியத்தில் மேம்பாடு செய்வதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்கூடாகக் காண முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பிற பகுதிகளுடனான கட்டமைப்பு வசதிகள் வடகிழக்கு பிராந்தியத்துடன் இல்லை என்பது நிதர்சனம். இப்பிராந்தியத்தை மேம்படுத்துவதன் மூலம் கிழக்கு நாடுகளுடனான வர்த்தகத்தை மேம்படுத்த முடியும். குறிப்பாக இப்பகுதியில்தான் வளர்ச்சிக்கான வாய்ப்பு ஏராளமாக உள்ளன.
நாட்டின் பிற பகுதிகளில் உள்ள ரயில், விமான போக்குவரத்து, சாலை வசதி ஆகியன வட கிழக்கு மாநிலங்களில் இல்லை என்பது தெளிவு. இருப்பினும் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் ஓரளவு போதுமானவை. இருப்பினும் இன்னும் வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டார் மான்டேக் சிங் அலுவாலியா.
இப்பகுதி மேம்பாட்டுக்காக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி இப்பகுதி முதல்வர்களின் மாநாட்டுக்கு திட்டக்குழு ஏற்பாடு செய்துள்ளதாக மான்டேக் சிங் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும், இன்னும்
என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்படும். இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமை தாங்க உள்ளதாக மான்டேக் சிங் தெரிவித்தார்.
நாட்டின் பிற பகுதிகளுடனான தொடர்பை மேம்படுத்துவது, மின் வசதியை மேம்படுத்துவது உள்ளிட்டவை கூட்டத்தில் பிரதானமாக விவாதிக்கப்படும். இப்பகுதியில் நீர் மின் நிலையங்களை அமைத்து அதிக அளவில் நீர் மின்சாரம் எடுப்பது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
குவஹாட்டியில் ஒரு கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அதில் வட கிழக்கு மாநில முதல்வர்களை அழைத்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இப்பிராந்தியத்தை தனியார் பங்களிப்பு மூலம் மேம்படுத்துவது குறித்து ஆராயப்படும் என்று மான்டேக் சிங் அலுவாலியா கூறினார்.-பி.டி.ஐ.