

கட்டுமான திட்டங்களுக்கு உதவ நீண்டகால நிதிச் சேவை வங்கியை தொடங்க ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது. குறிப்பாக இந்திய கட்டுமான துறையில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய கட்டுமான திட்டங்கள் மற்றும் பசுமைவெளி திட்டங்களுக்கு இந்த முதலீட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 கோடியாகும்.
வங்கி தொடங்குபவர்களுக் கான விதிமுறைகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது. அதே விதிமுறைகள்தான் இந்த நிதிச் சேவை வங்கிக்கும் பொருந்தும். இந்த நிதிச் சேவை வங்கிகளில் மிக பெரிய தொழில் நிறுவனங்கள் 10 சதவீதத்துக்கு மேல் பங்குகளைக் கொண்டிருக்கக்கூடாது.
வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட தனிநபர் கள், குறிப்பாக மூத்த அதிகாரி களாக பணியாற்றி சிறந்த பணி அனுபவத்தை கொண்டிருப் பவர்கள் தொழில் குழுமங்களுடன் இணைந்து இதற்கான உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். மொத்த சொத்து மதிப்பு குறைந்தபட்சம் ரூ.5,000கோடியைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த வங்கிகள் கிராமப் புறங்கள் மற்றும் புற நகரப்பகுதி களில் கிளைகளை திறக்க தேவை யில்லை. அதேபோல சமூகத்தில் குறைந்த வருமான பிரிவினருக்கு மற்றும் விவசாயக் கடன்களையும் அளிக்கத்தேவையில்லை. இந்த நீண்டகால நிதிச் சேவை வங்கிகள் கட்டுமான திட்டங்கள் மற்றும் அதைச் சார்ந்த துறையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
கட்டுமான துறை நீண்ட கால கடன் திருப்பம் கொண்டது என்பதால் வழக்கமான வங்கிச் சேவையில் கடனில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் நீண்ட கால முதலீட்டு தேவைக்கென தனியாக அமைப்பு தேவையாக உள்ளது. இந்த வங்கி சேமிப்பு டெபாசிட் பெறுவதை அனுமதிக்கும். ஆனால் ரூ.10 கோடிதான் குறைந்தபட்ச டெபாசிட் தொகையாக இருக்கும்.
பண மதிப்பிலான பாண்டுகளை வெளியிடுவதன் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டிக் கொள்ளலாம். வர்த்தக வங்கி கடன், சொத்துக்கடன், டெபா சிட் மூலமும் நிதி திரட்டிக் கொள்ள லாம். இதர வங்கிகள் போல ரொக்க கையிருப்பு விகிதத்தை (சிஆர்ஆர்) வைத்திருக்க வேண்டும். ஆனால் எஸ்எல்ஆர் விகிதத்தை வைத்திருக்க தேவையில்லை.
இது குறித்த கருத்துகளை வரும் மே மாதம் 19-ம் தேதி வரை அளிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.