விஜய் மல்லையாவுக்கு காங்கிரஸ் ஆட்சியில்தான் கடன் தரப்பட்டது: நிதித்துறை இணையமைச்சர் தகவல்

விஜய் மல்லையாவுக்கு காங்கிரஸ் ஆட்சியில்தான் கடன் தரப்பட்டது: நிதித்துறை இணையமைச்சர் தகவல்
Updated on
1 min read

வங்கிகளில் கடனைப் பெற்று இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில்தான் கடன் தரப்பட்டது. ஆனால் அவர் மீதான நடவடிக்கைகளை தற்போது பாஜக தலைமையிலான மோடி அரசு மேற்கொண்டு வருகிறது என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்தார்.

மக்களைவையில் துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் இந்த விவரத்தை அவர் தெரிவித்தார்.

2016 டிசம்பர் வரையான காலத்தில் வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 9,130 ஆகும். இவர்கள் பல்வேறு பொதுத்துறை வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.91,155 கோடி என்று குறிப்பிட்டார்.

விஜய் மல்லையாவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய அமைச்சர் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர் பெயர் 2004-ல் வெளியானது. ஆனால் 2008-ம் ஆண்டில் அவருக்கு மறுபரிசீலனை செய்யப்பட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

2009-ம் ஆண்டு வாராக் கடனாக அறிவிக்கப்பட்ட ரூ.8,040 கோடி தொகையை 2010-ம் ஆண்டில் மறு கடனாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார். ஆனால் அவர் மீதான நடவடிக்கைகளை பாஜக அரசு மேற்கொண்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் உள்ள அவரை இந்தியாவுக்குக் கொண்டுவர பல்வேறு அமைப்புகள் மூலம் சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத 9,150 பேரில் 8,364 பேர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் செலுத்த வேண்டிய தொகை ரூ. 85,258 கோடி. முதல் தகவல் அறிக்கை 2,024 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.29,557 கோடி என்றும் கங்வார் கூறினார்.

வசதி இருந்தும் பணத்தை செலுத்தாத 6,207 பேரீன் சொத்துகளை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in