

இந்தியப் பொருளாதாரத்தில் நிலவி வந்த தேக்க நிலை நடப்பு நிதி ஆண்டுடன் (மார்ச் 2014) முடிவடைகிறது. நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி 5.5 சதவீத அளவுக்கு உயரும் என்றும் அடுத்த நிதி ஆண்டில் இது 6 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்று மூடி'ஸ் தரச்சான்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மக்களவை பொதுத்தேர்தல் தொழிலதிபர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இத் தேர்தலினால் பொருளாதாரம் உயரும். இப்போதுள்ள நிலை மாறி ஸ்திரத்தன்மையை எட்டும். டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ஸ்திரமடைவதுடன் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் மூடி'ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த சில காலாண்டுகளாக பொருளாதாரம் ஒரு ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது. இருப்பினும் வளர்ச்சி முழு வீச்சை எட்டவில்லை. இருப்பினும் மேலும் சரிவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் மேற்கொள்ளும் சலுகைக் குறைப்பு நடவடிக்கைகளால் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 2013-ல் சரிந்த அளவுக்கு இனி சரிய வாய்ப்பில்லை. 2014-ல் பொருளாதார நிலை படிப்படியாக முன்னேறி அது உச்சபட்ச அளவை 2015-ல் நிச்சயம் எட்டும் என்று மூடிஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவின் ஸ்திரமான பொருளாதார வளர்ச்சி, நஷ்டமடைவதற்கு குறைந்த வாய்ப்புகள் என்ற தலைப்பிலான அறிக்கையில் பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. மூடிஸ் நிறுவனத்தின் சுதந்திரமான அமைப்பான பொருளாதார ஆய்வு மற்றும் பகுப்பாய்வு பிரிவு தன்னிச்சையாக இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவின் கடனை திருப்பி செலுத்தும் திறன் ஆகியவை குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.
2014-ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம் முதல் 5.5 சதவீத அளவுக்கு இருக்கும். இந்த நிலை படிப்படியாக உயர்ந்து 2015-ல் 6 சதவீதத்தை எட்டும். வளர்ச்சியின் முதல் படியாக ஏற்றுமதி அதிகரிக்கும். அடுத்தகட்டமாக முதலீடுகள் அதிகரிக்கும் என்று நிபுணர் கிளீன் லெவைன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்பதை உணர்வதற்கு பல்வேறு காரணிகளை அறிக்கையில் இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதிகபட்ச சரிவைச் சந்தித்தபிறகு 30 மாதங்களில் படிப்படியான முன்னேற்றம் தெரியும். இத்தகைய அறிகுறிகள் இப்போது தென்படுகின்றன. வீழ்ச்சிக்கான அறிகுறிகள் முற்றிலுமாக மறையும் என்றும் லெவைன் சுட்டிக் காட்டியுள்ளார்.
பொருளாதாரத்தில் மிக மோசமான கால கட்டம் முடிந்துவிட்டது. வீழ்ச்சியின் வேகம் குறைந்துவிட்டது. வெளியிலிருந்து பார்க்கும் போது பொருளாதாரம் வளர்ச்சியடைவது தெரியும். அது இந்த ஆண்டிலேயே நடைபெறும் என்று அறிக்கை கூறுகிறது. ஏற்றுமதி அளவு அதிகரிப்பது ஏற்கெனவே நடைபெறத் தொடங்கியுள்ளது. இதனால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அளவும் குறையும்.
இதற்கான காரணம் ரிசர்வ் வங்கி கவர்னரையே சாரும். பொதுத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் அமைய உள்ள அரசு எடுக்கும் நடவடிக்கைகள் தொழில்துறையை ஊக்குவிப்பதாக அமையும் என எதிர்பார்ப்பதாகவும், இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும் என்றும் அறிக்கை கூறுகிறது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சியின் எழுச்சி தெரிய ஆரம்பித்துள்ளது. வரும் காலாண்டில் இத்தகைய ஏற்றம் தொடரும். இதனால் முதலீட்டில் உள்ள ஆபத்து நீங்கும் என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஆசிய பிராந்தியத்தில் பெருமளவு சரிவைச் சந்தித்தது டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்புதான். ஏற்கெனவே 30 சதவீதம் வரை சரிந்திருந்த இதன் மதிப்பு கூடுதலாக 11 சதவீதம் சரிந்தது. இரண்டாம் காலாண்டில் வெளி வர்த்தக பற்றாக்குறை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதமாகக் குறைந்தது.
கடந்த சில ஆண்டுகளில் இந்த அளவுக்கு பற்றாக்குறை குறைந்தது இதுவேயாகும். இந்த அளவுக்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை தொடராது. தங்க இறக்குமதியாளர்கள் புதிய மாற்று வழியைக் கண்டுபிடிக்கும்போது இது மேலும் அதிகரிக்கலாம். பணவீக்கம் குறைந்திருப்பது தொழில் முதலீட்டு வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கச் செய்யும். 2014-ம் ஆண்டு முதல் அரையாண்டில் மொத்த விலைக்குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் மேலும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தி அதிகரிப்பு இதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கடனுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் 2015-ல் இதில் ஓரளவு மாறுதல் செய்யப்படலாம் என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வளர்ச்சி 4.8%: கிரிசில் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாகக் குறையும் என்று மற்றொரு தரச்சான்று நிறுவனமான கிரிசில் சுட்டிக் காட்டியுள்ளது.
இருப்பினும் 2014-15-ம் நிதி ஆண்டில் வளர்ச்சி 6 சதவீத அளவுக்கு உயரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பருவமழை பெய்து பணவீக்கம் கட்டுக்குள் வரும்போது இந்த வளர்ச்சி சாத்தியமாகும் என்றும் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பரவலாக பருவ மழை பெய்வது, சர்வதேச அளவில் பொருளாதார மீட்சி ஆகியன வளர்ச்சிக்கான காரணிகள் என்று சுட்டியுள்ள கிரிசில், மேலே குறிப்பிட்ட காரணிகள் சரியாக அமையாத பட்சத்தில் வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்துக்குக் கீழாக சரிய வாய்ப்புள்ளதாக அறிக்கை கூறுகிறது. நாட்டில் நிலுவையில் உள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் முடுக்கிவிடப்பட வேண்டும். சுரங்கத்துறையில் நிலவும் தேக்க நிலையைக் களைய வேண்டும். தொழில்துறை வளர்ச்சியானது வெளிப்புறத் தேவையைப் பொறுத்து அதிகரிக்கும் என்று கிரிசில் வெளியிட்டுள்ள இந்திய பொருளாதாரம் ஒரு கணிப்பு என்ற தலைப்பிலான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.