Published : 04 Jan 2017 10:39 AM
Last Updated : 04 Jan 2017 10:39 AM

எஸ்பிஐ துணை வங்கிகள் இணைப்பு அடுத்த நிதி ஆண்டுக்கு தள்ளிவைப்பு

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியை நடப்பு நிதி ஆண்டில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் (எஸ்பிஐ) இணைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசின் அறிவிக்கை இன்னும் கிடைக்காததால் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போடப்பட்டிருப்பதாக அந்த வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.

இது தொடர்பாக அருந்ததி பட்டாச்சார்யா கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. அதனால் வங்கிகள் இணைப்பு இன்னும் ஓரிரு காலாண்டுகள் தள்ளிப்போகலாம். ஒரு வேளை இப்போது கிடைத்தாலும், நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் வங்கிகளை இணைப்பது என்பது சரியான முடிவல்ல. தொழில்நுட்பம் உள்ளிட்ட பல விஷயங்களில் மாறுதல்கள் செய்ய வேண்டி இருக்கும். நிதி ஆண்டு முடியும் இந்த சமயத்தில் இதுபோன்ற ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. நிதி ஆண்டு முடிந்த பிறகு இணைப்பு வேலைகள் தொடங்கப்படும்.

இணைப்புக்கான காலத்தை மத்திய அரசு மாற்றி இருக்கிறதா என்பது தெரியவில்லை. அனுமதி கிடைத்தால்தான் எங்களுக்கு தெரியவரும். இந்த இணைப்பு குறித்த மத்திய அரசு அறிவிக்கை வெளியிடுவது மட்டும்தான் பாக்கி என அருந்ததி பட்டாச்சார்யா குறிப்பிட்டார்.

கடந்த மே மாதம் துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியை இணைப்பது குறித்த அறிவிப்பு வெளியானது. ஆகஸ்ட் மாதத்தில் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியது. அறிவிப்பு வெளியான சமயத்தில் நடப்பு நிதி ஆண்டுக்குள் (மார்ச் 2017) இந்த இணைப்பு முழுமையாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த இணைப்பு அடுத்த நிதி ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கி இணைப்புக்கு பிறகு புதிய வங்கியில் மத்திய அரசின் பங்கு 59 சதவீதமாக இருக்கும் என அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.

எஸ்பிஐ-யின் இரு துணை வங்கிகள் ஏற்கெனவே இணைக் கப்பட்டன. கடந்த 2008-ம் ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆப் சவுராஷ்ட்ரா இணைக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தூர் இணைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x