Published : 13 May 2017 10:21 AM
Last Updated : 13 May 2017 10:21 AM

தொழில் ரகசியம்: புதுமைக்கு பிள்ளையார் சுழி போடவேண்டும்!

செய்ததையே செய்துகொண்டிருந்தால் கிடைத்ததேதான் கிடைத்துக்கொண்டிருக்கும். போட்டி நிறைந்த மார்க்கெட்டிங் உலகில் இருக்கும் இடத்தில் இருக்கவே வேகமாக ஓட வேண்டும். இந்த லட்சணத்தில் பழையதை கட்டிக்கொண்டு, செய்தையே செய்துகொண்டு அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருந்தால் புளித்து போகவேண்டியது தான். புரிந்துகொள்ளுங்கள்!

இந்தியாவில் சென்ற ஆண்டு சுமார் 16,000 புதிய பிராண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. அதில் ஒரு சதவீதத்திற்கு குறைவாவை மட்டுமே வெற்றி பெற்றதாம். மீதி பிராண்டுகள் தானும் செத்து மற்றதை பேச்சு துணைக்கு கூட்டிக்கொண்டு போன ரகமாம். வெற்றி பெற்ற பிராண்டுகள் மட்டுமே புதுமையானவை என்றும் மற்றவை பெரும்பாலும் புதுமை போர்வையி லிருந்த பழைய கேஸ்கள் என்றும் இன்னொரு ஆய்வறிக்கை கூறுகிறது.

புதிய பிராண்டுகள் தோற்பதற்கு முக்கிய காரணம் அவைகள் பெயருக் குத்தான் புதிய பிராண்டுகளே ஒழிய பெரும்பாலும் அவை மார்க்கெட்டில் ஏற்கனவே இருக்கும் பழையவைதான். அரிதாரம் பூசி, அழகு படுத்தி, அம்சமாய் விளம்பரம் செய்து விற்க முனைந்தால் மட்டும் அந்த பழையை குருடிகளை கதவை திறந்து வாடிக்கையாளர்கள் வாங்கி, வரவேற்று வீட்டிற்குள் விடுவார்களா என்ன?

புதுமை என்றால் என்ன?

‘ரியல்’ ஜூஸ் புதிய சுவையை அறிமுகப்படுத்துவது புதுமை அல்ல. அது இன்னொரு ஃப்ளேவர் மட்டுமே. ‘ஆல்டோ’ கார் முதல் முறையாய் மஞ்சள் கலரில் வந்தால் புதுமையல்ல. அது இன்னுமொரு வேரியண்ட். அவ்வளவே.

தீர்க்கப்படாத வாடிக்கையாளர் தேவையை தீர்த்தோ, இருக்கும் தீர்வை இன்னமும் திறமையாக, எளிதாக, விலை குறைவாக தீர்க்கும் பொருளை புதுமை என்று கூறலாம். அப்படிப்பட்ட புதிய பொருள்களை, புதிய தீர்வுகளை மார்க்கெட் கண்டிராத புதுமையை படைக்க பல மார்க்கெட்டர்கள் முன் வருவதில்லை.

புதுமை புகுத்தவில்லையென்றால் முதுமைதான் வரும் முன்னேற்றம் வராது என்று தெரிந்தும் பல மார்க்கெட் டர்கள் புதுமை புரிய முனைவ தில்லை. புதிய பொருள்களை அறிமுகப் படுத்துவதில்லை. ஏன் இந்த நிலை?

அடிப்படையிலேயே பலர் புதுமைகளை பார்த்து பயப்படுபவர்கள். செய்வதையே செய்துகொண்டிருந்தால் போதும் என்று நினைப்பவர்கள். செல்பவர்களோடு சேர்ந்து செல்வதே சேஃப் என்று சிந்திப்பவர்கள். ஹோட்டல் மெனு கார்ட்டை பத்து நிமிடம் பரிட்சைக்கு படிப்பது போல் படித்தாலும் ‘ஒரு பிளேட் தோசை, ஒரு காபி’ ஆர்டர் செய்பவர்கள். இதனாலேயே ஹோட்டல்களில் சர்வர்கள் வந்தவர்களிடம் ஆர்டரை கேட்காமல் தானாகவே தோசையை டேபிளில் வைத்து ‘எப்படியும் இதைத் தானே கேட்கப் போகிறாய்’ என்று கேட்கும் ரேஞ்சிற்கு உள்ளவர்கள். சாப்பிடுவதில் கூட பழையதை கட்டிக்கொண்டு அழுபவர்களா புதுமைகளை புகுத்தப் போகிறார்கள்!

வாழ்க்கையில் ஓகே, வியாபாரத்தில் புதுமைகள் புகுத்தாவிட்டால் விமோசனம் கிடையாது. இது தெரிந்தும் மார்க்கெட்டர்கள் புதுமையை புகுத்த தவற பல காரணங்கள் உண்டு. அப்படியே தப்பித் தவறி புதுமைகளை புகுத்தினாலும் அவை அக்மார்க் புதுமைகளாக இருப்பதில்லை.

புதுமை முயற்சிக்கு பிள்ளையார் சுழி போடவேண்டியது வாடிக்கை யாளர்கள் தேவை தானே ஒழிய போட்டியாளர்களின் நிர்பந்தமாக இருக் கக்கூடாது. போட்டியாளர் செய்கிறார், நாமும் அதே புதுமையை செய்வோம் என்றால் அது புதுமையாகவும் இருக்காது, உருப்படவும் செய்யாது. வாடிக்கையாளருக்கு என்ன தேவை என்பதை ஆய்வு செய்து அத்தேவையை மற்றவருக்கு முன் பூர்த்தி செய்யும் முயற்சிதான் ஒவ்வொரு தொழிலுக்கும் முக்கியம். அப்பொழுதுதான் புதுமை என்பது கம்பெனியின் கலாசாரமாக மாறும். போட்டி புயலை மீறி வெற்றி கரை சேரும்!

‘3M’ என்ற கம்பெனி பற்றி பலருக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் பொருட்கள் இல்லாத இடமே இல்லை. ரோட்டில் வண்டியின் வெளிச்சத்தில் வழிகாட்டும் பச்சை கலர் போர்டுகள் முதல் ஹைவேக்களில் ரோடு ஓரத்தை சுட்டிக்காட்டும் மினுமினுக்கும் மார்க்கர்கள் வரை, போஸ்ட் இட் நோட்டுகள் முதல் பல் டாக்டர்கள் உபயோகிக்கும் மருந்து வரை 3M தொடாத துறையும் இல்லை, புரியாத புதுமையும் இல்லை. புதுமைக்கு பெயர் போன அக்கம்பெனியின் எழுதப்படாத விதி ஒன்று உண்டு: ‘கம்பெனியின் லாபத்தில் நான்கில் ஒரு பங்காவது கடந்த நான்கு வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருட்களால் இருக்கவேண்டும்’. புதுமையை கம்பெனி முழுவதும் காற்று போல் பரவச்செய்யும் எப்பேற்பட்ட கோட்பாடு பாருங்கள்!

புதுமை என்பது வீட்டு சுவற்றுக்கு சுண்ணாம்பு அடிக்கும் வேலை இல்லை, பொழுது போகாத ஏதோ ஒரு பொங்கலுக்கு அடிப்பதற்கு. புதிய பொருளை அறிமுகப்படுத்துவது என்பது சதா சர்வ காலமும் சிந்தித்துகொண்டே இருப்பது. ‘கெல்லாக்ஸ்’ கம்பெனியில் ஒவ்வொரு வாரமும் மீட்டிங் நடக்குமாம். புதியதாய் என்ன செய்யலாம், எங்கு என்ன தேவையிருக்கிறது என்பது பற்றி விவாதிக்க. அதனாலேயே புதுமையாய் சிந்தித்து தென் இந்தியர்களுக்கு பிடிக்கும் வகையில் பொங்கல் ஓட்ஸ்ஸை அவர்களால் அறிமுகப்படுத்த முடிந்தது. வெற்றி பெறவும் முடிந்தது.

பழைய நடப்புகளைக் கொண்டு நடந்தவைகளை அலசி இப்படி தான் இருக்கவேண்டும் என்ற நினைப்பை வைத்துக்கொண்டிருந்தால் புதிய பொருள்களை கொண்டு வர முடியாது. சீயக்காயில் என்ன புதியதாய் செய்ய லாம் என்று சிலர் நினைத்துக்கொண் டிருக்க, ஷாம்புவில் புதியதாய் என்ன புகுத்தலாம் என்று வேறு சிலர் யோசித்துக்கொண்டிருக்க இரண்டை யும் கலந்து ‘மீரா சீயக்காய் ஷாம்பு’ என்ற புதிய பிராண்டை அறிமுகப்படுத்தி வெற்றி பெற்ற ‘கவின்கேர்’ரின் சாதுர்யம் உங்களுக்கு வேண்டும்.

புதிய பொருள்கள் உருவாவதை தடுப்பது பலர் மனதில் பரவலாய் இருக்கும் ஒரு பயம். பெரிய கம்பெனிகளை எதிர்த்து எப்படி புதுமை செய்து போட்டியிடுவது என்று பயந்து அவர்களை கிட்டத்தட்ட பூச்சாண்டியை பார்ப்பது போல் பார்க்கவே பழகிவிடுகின்றனர். இந்த பயம் அர்த்தமற்றது. பெரிய கம்பெனிகள்தான் புதிய பொருட்களை அறிமுகப்படுத்த ஏகத்துக்கும் யோசிக்கும். அதிலும் பன்னாட்டு கம்பெனிகள் அவர்கள் நாட்டு பொருட்களை தான் இங்கு சந்தையிட முயல்வார்களே ஒழிய நம் நாட்டு கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், நாம் உபயோகிக்கும் பொருள்களைப் பற்றிய அடிப்படை அறிவு கூட அவர்களுக்கு குறைவே. இதையே சாதகமாக்கி நம்மூர் மக்களுக்கு ஏற்ற புதுமையான பொருட்களை தைரியமாக புகுத்தலாம். மார்க்கெட்டையே ஒரு கலக்கு கலக்கலாம்.

அப்படித்தான் கலக்குகிறது ‘பேப்பர் போட்’ என்ற நம்மூர் பிராண்ட். நம் நாடெங்கும் உள்ள பாரம்பரிய பானங்களை தேடிப் பிடித்து அதை அழகாக பாக் செய்து புதுமையாக விற்கும் இந்திய கம்பெனி. வடநாட்டு ஜல்ஜீரா முதல் நம்மூர் நீர் மோர், பானகம் வரை பாரம்பரியத்தை பாக் செய்து விற்கிறது. ஜில்லென்ற டிமாண்ட், சல்லென்று விற்கிறது. பெரிய கம்பெனிகளையே ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக் குடிக்கிறது!

செய்ததையே செய்துகொண்டிருந் தால் கிடைத்ததேதான் கிடைத்துக் கொண்டிருக்கும் என்பார்கள். இன் றைய போட்டி நிறைந்த மார்க்கெட்டிங் உலகில் இருக்கும் இடத்தில் இருக்கவே வேகமாக ஓட வேண்டிய நிலை. இந்த லட்சணத்தில் பழையதை கட்டிக்கொண்டு, செய்தையே செய்து கொண்டு அரைத்த மாவையே அரைத் துக்கொண்டிருந்தால் புளித்து போக வேண்டியது தான். புரிந்துகொள் ளுங்கள்.

புதிய இடங்கள் செல்ல பழைய ரோடுகளில் பயணிக்காதீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுப் பாருங்கள். அவர்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சங்கடங்களை சல்லடை போட்டுத் தேடுங்கள். என்ன பிரச்சனை, எதனால் இந்த கஷ்டம் என்று ஆராயுங்கள். அதை போக்கும் புதிய பொருள்களை படைக்கும் வழியை தேடுங்கள். புதிய பொருளுக்கான ஐடியா தானாய் பிறக்கும். சுயம்புவாய் மனதில் முளைக்கும்.

‘கேள்வி கேட்பவன் அந்த நிமிடம் முட்டாள். கேள்வியே கேட்காதவன் ஆயுள் முழுவதும் முட்டாள்’ என்ற ஒரு சீன பழமொழி உண்டு. கண்ட சீன பொருள்களை எல்லாம் வாங்கி வீட்டில் வைக்கிறீர்கள். இந்த சீன பழமொழியை கண்ணில் படும்படி ஆபிசில் எழுதி வையுங்கள். உங்களுக்கும் உங்கள் தொழிலுக்கும் புண்ணியமாய் போகும்!

தொடர்புக்கு: satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x