

பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்களன்று எழுச்சி காணப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 300 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 22 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து 22055-ஐத் தொட்டது.
பங்குச் சந்தை வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 22074 புள்ளிகள் வரை அதிகபட்சமாக சென்றது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டியில் 88 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 6584 புள்ளியில் முடிந்தது. வர்த்தகத்தின் இடையே நிஃப்டி 6591 புள்ளி வரை சென்றது.
அரசுத் துறை நிறுவனங்களான கெயில் மற்றும் ஓஎன்ஜிசி பங்கு விலைகள் தலா 4 சதவீதம் உயர்ந்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், ஹிந்துஸ்தான் யுனி லீவர், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகளும் அதிகரித்தன.
அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் (எப்ஐஐ) அதிக அளவில் வங்கிப் பங்குகளில் முதலீடு செய்ததும் வங்கிப் பங்கு விலைகள் உயர்ந்ததற்கு முக்கியக் காரணமாகும்.
மொத்தமுள்ள 12 துறைகளில் 9 துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன.
வங்கித் துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம், ஆட்டோமொபைல் ஆகிய துறைகளின் பங்கு விலைகள் அதிகரித்தன. பொதுத்துறை பங்குகளின் விலை உயர்ந்தே முடிந்தன. பி.இ.எம்.எல்., எம்.ஒ.ஐ.எல்., பி.எஃப்.சி., கோல் இந்தியா, என்.எம்.டி.சி. ஆர்.இ.சி. ஆகிய பங்குகள் 3 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து முடிந்தன.
நுகர்வோர் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம், மருந்து பொருள் தயாரிப்பு நிறுவனப் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன.
ரிசர்வ் வங்கி தனது காலாண்டு நிதிக் கொள்கையை ஏப்ரல் 1-ம் தேதி அறிவிக்க உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் வங்கிப் பங்குகளில் முதலீடு செய்தனர். இதுவும் பங்குச் சந்தை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று ரெலிகரே செக்யூரிட்டீஸ் நிறுவனத் தலைவர் ஜெயந்த் மாங்லிக் கூறினார்.
வங்கிகள் சிறப்பாக செயல்படும் என்ற யூகத்தால் வங்கி பங்கு விலைகள் உயர்ந்தன. இயக்குநர் குழு கூட்டத்துக்கு முன்பாகவே இடைக்கால டிவிடென்ட்டை ஓஎன்ஜிசி அறிவித்ததால், அந்நிறுவனப் பங்கு விலை 4 சதவீதம் உயர்ந்தது. நடப்பு ஆண்டில் இந்திய பங்குச் சந்தைகள் வலுவாக இருக்கும் என்ற சமிக்ஞைகள் தோன்ற ஆரம்பித்துள்ளன. பொதுத் தேர்தலுக்குப் பிறகும் வளர்ச்சி தொடரும் என்பதால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளதாக கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவன துணைத் தலைவர் சஞ்ஜீவ் சர்பாடே தெரிவித்தார்.
ஆசிய பிராந்தியத்தில் சில பங்குச் சந்தைகளிலும் ஏற்றம் காணப்பட்டது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து முடிவடைந்தது. தொடர்ந்து வரும் அந்நிய முதலீடு ரூபாய் ஏற்றத்துக்கு காரணமாகும். வர்த்தகத்தின் இடையே ஒரு டாலர் 60.77 ரூபாயில் முடிவடைந்தது.