வரைவு ஜிஎஸ்டி. மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வரைவு ஜிஎஸ்டி. மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Updated on
1 min read

சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு வலுசேர்க்கும் 4 ஜி.எஸ்.டி வரைவு மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை திங்களன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இழப்பீடு சட்டம்-ஜிஎஸ்டி (சி-ஜிஸ்டி), ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. (ஐ-ஜிஎஸ்டி), யூனியன் பிரதேச ஜி.எஸ்.டி. (யுடி. ஜி.எஸ்.டி.) ஆகியவை பணமசோதாவாக அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மத்திய அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த 4 வரைவு ஜி.எஸ்.டி. மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததையடுத்து இந்த வாரத்தில், அல்லது இன்றே கூட நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. மசோதா மட்டுமே விவாதிக்கப்பட்டது.

இந்த 4 சட்டமசோதாக்களும் ஒரே நாளில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்த பிறகு மாநிலங்கள் மாநில ஜி.எஸ்.டி மசோதாவை விவாதித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யலாம். எஸ்-ஜிஎஸ்டி என்று அழைக்கப்படும் மாநில ஜி.எஸ்.டி. மசோதாவை மாநில அரசுகள்தாம் சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும்.

அனைத்து சட்டமசோதாக்களும் நிறைவேற்றம் அடையும் நிலையில் ஜூலை 1-ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் ஜூலை 1-ம் தேதி அறிமுகமாகும்.

சரக்கு விற்பனை மற்றும் சேவைகள் மீது மொத்தமாக ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்பட்டு புதிதான மறைமுக வரிவிதிப்பு முறை அமலான பிறகு வரிவருவாயை மாநில, மத்திய அரசுகள் கிட்டத்தட்ட சரிபாதியாக பிரித்துக் கொள்ளும்.

மத்திய வரிகளான கலால், சேவை வரிகள் மற்றும் மாநிலங்கள் விதிக்கும் மதிப்புக் கூட்டு வரி ஆகியவை மொத்தமாக ஜி.எஸ்.டி. வரிக்குள் அடங்கிவிடும்.

ஐ-ஜிஎஸ்டி என்பது மாநிலங்களுக்கு இடையிலான விற்பனைகள் மீது விதிக்கப்படும் வரியாகும். ஜி.எஸ்.டி.யின் கீழ் 4 அடுக்கு வரிவிதிப்பு முறை இறுதி செய்யப்பட்டுள்ளது, அதாவது 5,12, 18, 28 சதவீதங்கள் என்ற 4 அடுக்கு வரிவிதிப்பு முறை இறுதி செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in