

2030-ம் ஆண்டில் இந்திய சாலை களில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை முழுமையாக நீக்கி விட்டு, எலெக்ட்ரிக் கார்களை கொண்டுவர திட்டமிட்டப்பட்டுள்ளதாக மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். இந்திய தொழிலக கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: விரைவில் மின் வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். 2030-ம் ஆண்டில் நாட்டில் ஒரு டீசல் மற்றும் பெட்ரோல் கார்கள் கூட விற்பனையாக கூடாது என்பது மத்திய அரசின் இலக்கு. இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்கு மதி குறையும். மின் வாகனங்கள் துறை ஸ்திரமடைவதற்காக மத்திய அரசு 3 ஆண்டுகள் உதவி செய்யும். மாருதி நிறுவனத்தின் லாபம் 30% வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட சமயத்தில் மத்திய அரசு உதவி செய்திருக்கிறது என்பதை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
மத்திய கனரக அமைச்சகமும், நிதி ஆயோக்கும் இணைந்து மின் வாகன மேம்பாட்டுக்கான கொள்கையை உருவாக்கி வரு கிறது. மின் வாகனங்களுக்கு ஏற்றுக்கொள்ளும்படியான விலையை நிர்ணயம் செய்யும் பட்சத்தில் மக்கள் மின் வாகனங்களை வாங்குவதற்கு முன்வருவார்கள்.
கடல் பகுதியில் காற்றாலை அமைப்பது இப்போது ஆராய்ச்சி நிலையில் இருக்கிறது. மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி இந்த துறையில் முதலீடு செய்யும். இதன்மூலம் இந்த பிரிவில் வருங்காலத்தில் ஆராய்ச்சிகள் மேலும் தொடரும் என கோயல் தெரிவித்தார்.