

ரொக்க பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ரூ.2 லட்சத்துக்குமேல் முடியாது என்ற கட்டுப்பாடு வங்கி மற்றும் அஞ்சல் நிலைய சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கு பொருந்தாது என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிவத்தனைகள் மேற்கொண்டால் அதற்கு ஈடான தொகையை சம்பந்தப்பட்டவரிடமிருந்து அபராதமாக வசூலிக்க வருமான வரி சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இந்த கட்டுப்பாட்டை தளர்த்தி புதிதாக ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதில் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அஞ்சல் அலுவலகங்களின் சேமிப்பு கணக்கிலிருந்து எடுக்கப்படும் பணத்துக்கு இந்த விதிமுறை பொருந்தாது என மத்திய நேரடி வரி ஆணையம் விளக்கமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2017-ம் ஆண்டு பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி, ரொக்க பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.3 லட்சமாக இருக்கும் என்று அறிவித்தார். ஆனால் இந்த உச்சவரம்பு ரூ. 2 லட்சமாக பின்னர் குறைத்து மக்களவையில் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இது தொடர்பாக வருமான வரித்துறையினர் புதிய விளக்கம் கொடுத்துள்ளனர். அதில் வங்கிகள், கூட்டுறவுப் வங்கிகள், அஞ்சல் அலுவலகங்களின் சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை எடுக்க கட்டுப்பாடுகள் இல்லை என கூறப்பட்டுள்ளது.
ரொக்க பண பரிவர்த்தனையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் பொருளாதாரம் அதிகரிப்பதுடன், கறுப்பு பண மதிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என சந்தை நோக்கர்கள் கூறிவருகின்றனர். ஒரு தனிநபர் ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரையில் மட்டுமே பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.