

டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் ஸ்ரீகாளஹஸ்தி பைப்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ.40.10 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.41.01 கோடியாகும். 9 மாதங்களில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் ரூ.109 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.110 கோடியாக இருந்தது.
நிலக்கரி மூலம் வெப்பம் பெறுவதில் புதிய நுட்பமான பிசிஐ தொழில் நுட்பம் ஜனவரி மாதம் முதல் பயன்படுத்தப்படுவதாகவும் இதனால் டக்டைள் இரும்புக் குழாய் உற்பத்தி ஸ்திரமடைந்துள்ளதாகவும் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் ஜி.எஸ்.ரதி தெரிவித்துள்ளார். மின் தேவையை பூர்த்தி செய்ய 16 மெகாவாட் மின்னுற்பத்தி நிலையம் ரூ. 65 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இப்பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து நிலக்கரியின் விலை அதிகரித்து வந்தபோதிலும் செலவினங்களைக் கட்டுப்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.