Published : 24 Sep 2018 11:17 AM
Last Updated : 24 Sep 2018 11:17 AM

ஆன்லைன் ராஜா 45: யாஹூ

ஜெர்ரி யாங்கை முதன்முதலாகச் சந்தித்த நாட்கள் ஜாக் மா முன் நிழலாடின. 1997.  ஜெர்ரி யாங் சீனா வந்தார். அவர் பிறந்த தைவான் நாட்டுக்கும், சீனாவுக்குமிடையே அரசியல் பகை. ஆனாலும், ``அனைவரும் சீனச் சகோதரர்கள்” என்னும் உள்ளுணர்வோடு ஒவ்வொரு சீனக் குடிமகனும் அவர் வெற்றியைத் தன் சொந்த வெற்றியாகக் கொண்டாடினான்.  இன்னொரு ஜெர்ரி யாங் ஆக விரும்பினான். ஜாக் மாவும் தான்.

ஜெர்ரி யாங் சுட்டு விரலை அசைத்தால், சீனாவில் முதலீடு கொட்டும். லட்சக் கணக்கில் வேலை வாய்ப்புகள் வரும். சீன அரசு வி.ஐ.பி. வரவேற்புக்கு ஏற்பாடு செய்தது. யாரிடம் பொறுப்பை ஒப்படைப்பது? அரசாங்க அதிகாரியாக இருக்க வேண்டும், சீனமும், ஆங்கிலமும் சரளமாகப் பேசவேண்டும், இன்டர்நெட் பற்றித் தெரிந்திருக்கவேண்டும். அரசின் இன்ஃபோஷேர் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்த ஜாக் மா தலையில் கிரீடம்.   

தன் கனவு தேவனோடு சீனப் பெருஞ்சுவர் அருகே நின்றபடி ஜாக் மா போட்டோ எடுத்துக்கொண்டார். அடிக்கடி பார்த்துப் பார்த்து ஆனந்த நினைவுகளில் அவர் மூழ்கும் பொக்கிஷம் அது. பயணத்தைக் கனகச்சிதமாக நடத்திய ஜாக் மாவை ஜெர்ரிக்கு  மிகவும் பிடித்தது. அன்போடு பழகினார். இதனாலேயே, இன்ஃபோஷேர் நிறுவனத்தை யாஹூவின் சீனப் பிரதிநிதியாக நியமித்தார். ஜெர்ரி யாங் வருகை சீனாவுக்கு ஏமாற்றம். அங்கே முதலீடு செய்வதைத் தள்ளிப்போட்டார்.

”சீனாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது” என்று காரணம் சொன்னார். அவருக்கு இன்னொரு பயமும்இருந்தது. யாஹூ தேடிய இணைய தளங்கள் பிறரால் இயக்கப்பட்டவை. அவற்றின் உள்ளடக்கத்தை யாஹூவால் கட்டுப்படுத்த முடியாது. இதேபோல் ராய்ட்டர்ஸ் (Reuters) என்னும் இங்கிலாந்து நாட்டுச் செய்தி நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டிருந்தார்கள்.

பாரபட்சமின்றி உலகச் செய்திகளை வழங்கும் இவர்களின் செய்திகளைச் சீன அரசின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்பத் தணிக்கை செய்ய முடியாது. ஆகவேதான், சீனாவிலிருந்து எட்டி நின்றார். 1998 – இல், வெளிநாடுகளில் வாழும் சீனர்களுக்காக அமெரிக்காவில் செர்வர் கட்டமைத்தார்.

சீனாவில் இன்டர்நெட் அமோகமாக வளரத் தொடங்கியது. சீன அரசும் ஜெர்ரி யாங்கைத் தொடர்பு வளையத்திலேயே வைத்திருந்தார்கள். தேடிவரும் திருமகளை உதறித் தள்ளுகிறோமோ என்று தயக்கம், கலக்கம், குழப்பம்.  1999. களத்தில் குதிக்க முடிவெடுத்தார். அவர் முன்னால்

இரண்டு பாதைகள் – முழுக்க முழுக்க யாஹூவின் கிளையாகத் தொடங்கலாம், அல்லது ஏதாவது சீனக் கம்பெனியுடன் சேர்ந்து கூட்டு முயற்சியாக. பலாபலன்களைச் சீர்தூக்கிப் பார்த்தார். உள்ளூர்க் கம்பெனியுடன் கை கோர்ப்பது அனுகூலமாகத் தோன்றியது. அவர்களுக்குச் சீன மக்களின் நாடித் துடிப்பு புரியும். சர்வசக்தி கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிப் பிரபலங்களைக் கட்டியணைத்துப் போகவும் தெரியும். 

இத்தனை நுணுக்கமாக அலசியவர் கூட்டாளியைத் தேர்ந்தெடுப்பதில் தவறு செய்தார்.  ஃபெளண்டர் (Founder) என்னும் சீனக் கம்பெனியோடு சேர்ந்தார். இவர்கள் கம்ப்யூட்டர், மென்பொருள் தயாரிப்பாளர்கள். இணையதளம், தேடுபொறி ஆகியவற்றோடு தொடர்பில்லாதவர்கள்.  இவர்களின் முக்கிய பலம், அரசியல் செல்வாக்கு, அரசுத் தொடர்பு.

செப்டம்பர் 1999. இணையதளத்தின் பெயர் www.yahoo.com.cn.  20,000 சீன இணையதளங்கள், ஒரு சில அமெரிக்க இணையதளங்களின் மொழிபெயர்ப்பு ஆகியவற்றுக்குத் திறவுகோல். இத்தோடு ஈ மெயில், மெஸெஞ்சர். இத்தனை இருந்தும், யாஹூவால் காலூன்றவே முடியவில்லை. முக்கிய காரணம், கம்பெனியை வழி நடத்திய ஃபெளண்டர் அரசியல் தொடர்புகளை மட்டுமே நம்பியிருந்தார்கள். தொழில்  முனைப்போ, தொலைநோக்குப் பார்வையோ இல்லாதவர்கள். 

இதனால், பைடு (Baidu), டென்சென்ட் (Tencent) என்னும் இரு கம்பெனிகள் யாஹுவை முந்தத் தொடங்கின. பைடுவுக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பைடு நிறுவியவர் லீ யான்ஹாங் (Li Yanhong).

ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். பீகிங் பல்கலைக் கழகத்தில் தகவல் அறிவியல் (Information Science) படித்தார். அமெரிக்காவில் பஃபல்லோ நகரத்தில் இருக்கும் நியூயார்க் மாநில பல்கலைக் கழகம் (State University of New York, Buffalo) கம்ப்யூட்டர் துறையில் புகழ் பெற்றது. இங்கே முதுநிலைப் படிப்புக்கு உதவித்தொகையோடு லீக்கு அட்மிஷன் கிடைத்தது. இங்கே கம்ப்யூட்டர் துறைப் பேராசிரியர் ஸர்கூர் நாராயணமூர்த்தி ஸ்ரீஹரி. பெயரில், ஸர்கூர் என்பது பிறந்தஊர்.

மைசூரிலிருந்து சுமார் 55 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் சின்ன டவுன். நாராயணமூர்த்தி அப்பா. சொந்தப் பெயர் ஸ்ரீஹரி. (இன்றும் அதே பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகத் தொடர்கிறார்.) லீக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுள் ஸ்ரீஹரி முக்கியமானவர்.

லீ 1997 – இல் தேடுபொறி தொடர்பான கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை வாங்கினார். துணிகர முதலீட்டாளர்கள் 11 மில்லியன் டாலர்கள் தந்தார்கள். 2000 – த்தில் சீனா வந்தார். பைடு தொடங்கினார்.*  அடுத்த மூன்று வருடங்கள் சிரமதசை. தேடுபொறி பிசினசை விட்டுவிட்டு வேறு ஏதாவது செய்யுமாறு பலர் உபதேசம். ஆனால், லீ தன் இலக்கில் விடாக்கண்டர்.  சொன்னார்,``எங்கள் கவனத்தின் குவிமையம் தேடுபொறி மட்டுமே.” கைமேல் பலன். 2003 – இல் நம்பர் 1 இடம். 2005 – இல் மகா வெற்றி கண்ட ஐ.பி.ஓ. தொடர் வளர்ச்சி. அசைக்கமுடியாத முதல் இடம்.   

* “நூறுமுறை, ஆயிரம் முறை அவளை அந்தப் பெரும் குழப்பத்தின் நடுவே தேடினேன். திடீரென, ஒளி மங்கும் ஓரிடத்தில் அவள் நிற்பதைப் பார்த்தேன்” என வருகிறது சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு சீனப்பாடல். நூறுமுறை என்பதன் சீன மொழி வார்த்தை “பைடு.” பாடலில், அழகி என்பது நாம் தேடித் திரியும் இலக்குகளைக் குறிக்கிறது. தொடர்ந்து முயன்றால், வானமும் வசப்படும் என்பது கருத்து. இந்தப் பாடலின்  உந்துதலால்தான், லீ தன் கம்பெனிக்கு பைடு என்று பெயர் வைத்தார்.

டென்சென்ட் நிறுவியவர், மா ஹாட்டிங் (Ma Huateng) என்னும் சீனக் கம்ப்யூட்டர் எஞ்சினீயர். நாட்டில் மொபைல் பேஜர்கள் பிரபலமாகி வருவதைப் பார்த்தார். 1999 – இல் இவற்றுக்கான மென்பொருள் தயாரிக்கும் கம்பெனி தொடங்கினார். அப்போது ஒரு மெஸேஜ் அனுப்பச் செலவு 10 சென்ட்கள். இதுதான் பெயர்க் காரணம். இரண்டே வருடங்களில் 10 லட்சம் பயன்பாட்டாளர்கள். நாஸ்ப்பேர்ஸ் (Naspers) என்னும் தென் ஆப்பிரிக்க முதலீட்டு நிறுவனம் டென்சென்ட்டின் வருங்காலத்தில் அமோக நம்பிக்கை வைத்தார்கள். 32 மில்லியன் டாலர்கள் தந்து 33 சதவிகித உரிமை பெற்றார்கள். மெஸேஜிங்கைத் தாண்டி, சமூக வலைதளம், ஆன்லைன் கேம்ஸ் என விண்ணை நோக்கிச் சிறகடித்தது டென்சென்ட். 

யாஹூ + ஃபெளண்டர் கூட்டணியால் பைடுவையும், டென்சென்ட்டையும் நெருங்கவே முடியவில்லை. கூட்டாளியை மாற்ற ஜெர்ரி யாங் முடிவெடுத்தார். புதிய சகா, ஜோ ஹாங்யி  என்பவரால் 1998  -இல் தொடங்கப்பட்ட 3721 நெட்வொர்க் சாஃப்ட்வேர் என்னும் சீனக் கம்பெனி. ஏன் இந்தப் பெயர்? ``மூன்றை ஏழால் பெருக்கினால் இருபத்தி ஒன்று வரும். இது சுலபமானது. இதேபோல் எங்கள் இணையதளம் பயன்படுத்துவதும் செம ஈசி” என்பது நிறுவனர் ஜோ ஹாங்யி (Zhou Hongyi) தந்த விளக்கம்.  அவர் படா திறமைசாலி. பிசினஸில் ஜெயிக்க தொழில்நுட்பம் மட்டும் போதாது, மார்க்கெட்டிங்கும் அவசியம் என்பதை உணர்ந்தவர். பயன்படுத்தினார். பலன்? 2002 – இல் வருமானம் 17 மில்லியன்.

ஜோ ஹாங்யி விளம்பரப் பிரியர். இதற்காக வேண்டாத சண்டைகளை வம்புக்கு இழுப்பார். கம்பெனி இணையதளத்தில், AK 47 என்னும் ஆட்டோமாட்டிக் துப்பாக்கியைக் கையில் வைத்தபடி ஸ்டைல் போஸ். இதனால், இவர் செல்லப்பெயரே ஏ.கே.47 ஆகிவிட்டது. அவரும் இதை ரசித்தார்.   

யாஹூ, 3721 – உடன் சேரப்போகிறது என்னும் செய்தி கசிந்தவுடனேயே, பலர் ஜெர்ரி யாங்கை எச்சரித்தார்கள். “நீங்கள் சாது. அவர் முரட்டுக்காளை. வேண்டாம் இந்த உறவு.” இது சமாளிக்கக்கூடிய சுலபப் பிரச்சனை என்று ஜெர்ரி யாங் நினைத்தார். நவம்பர் 2003.   3721 – இல் 120 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்தார்.

சில மாதங்களில் முரட்டுக் காளை திமிறத் தொடங்கியது. யாஹூ ஊழியர்கள் சோம்பேறிகள், 3721 ஊழியர்களை விட அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் என்று ஜோ ஹாங்யி வீட்டுச் சமாச்சாரத்தை வீதிக்குக் கொண்டு வந்தார். உரசல் சண்டையானது. ஜூலை 2005. பதினெட்டே மாதங்களில் பல நூறு பணியாளர்களோடு கம்பெனியை விட்டு வெளியேறினார். சொந்தக் கம்பெனி தொடங்கினார். பேட்டியில் காழ்ப்பைக் கொட்டினார்.

“என் மிகப் பெரும் தவறு யாஹூவுக்கு 3721 – ஐ விற்றதுதான். ஜெர்ரி யாங்கும், அவர் உயர் அதிகாரிகளும் நல்லவர்கள். ஆனால் மேதைகளல்ல, தலைமைப் பண்பு கொண்டவர்களல்ல. அவர்களிடம் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்கும் வேகம் இல்லை, நிர்வாகத் திறமை இல்லை” என்றார். 

சீனாவில் இப்படி யாஹூ திணறிக்கொண்டிருந்தபோது, அவர்களின் அமெரிக்க சாம்ராஜ்ஜியமும் ஆட்டம் கண்டுகொண்டிருந்தது. 1998 – இல் களத்துக்கு வந்திருந்த கூகுள் மூன்றே வருடங்களில் யாஹூவின் உயரத்துக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் தேடுபொறியின் வேகத்தால், பயன்படுத்துவோரும், யாஹூவின் தொழில்நுட்ப வல்லுநர்களும் கூகுளுக்கு மாறிக்கொண்டிருந்தார்கள்.

இன்டர்நெட் மேதைகள் யாஹூவுக்குக் கண்ணீர் அஞ்சலி எழுதத் தொடங்கிவிட்டார்கள். அமெரிக்க மார்க்கெட் கை நழுவிப்போவது ஜெர்ரி யாங்குக்கு நிச்சயமாகிவிட்டது. சீனாவைக் காப்பாற்ற என்ன செய்யலாம்? அவர் கண்ணுக்குத் தெரிந்த ஒரே மீட்பர், 1997 – இல் அவர் சந்தித்திருந்த துடிப்பான இளைஞர், ஜாக் மா.      

(குகை இன்னும் திறக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x