

விவசாயிகள் தங்களுக்கான வேளாண்மை கருவித் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலான திட்டம் ஒன்றை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. விவசாயிகள் பங்கேற்புடன் கூடிய வேளாண் கருவிகள் மையங்கள் (custom hiring Centres) என்ற பெயரில் உருவாகும் இந்தத் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிறு விவசாயிகள் தங்கள் நிலங்களில் உழவு செய்யவும், மருந்து அடிக்கவும், களை யெடுக்கவும், அறுவடை செய்யவும் டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களையும், கருவிகளையும் தனியாரிடம் வாடகைக்குப் பெறுவதில் ஏகப்பட்ட சிரமங்கள் உள்ளன. தவிர, அவற்றின் வாடகையும், அதை இயக்கும் நபர்களுக்கான கூலியும் கட்டுபடியாகும் நிலை யில் இருப்பதில்லை.
விவசாயிகளின் இந்த சிரமத்தைப் போக்க ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகங்கள் குறைந்த வாடகையில் விதைப்பு, விளைவிப்பு முதல் அறுவடை வரையிலான கருவிகளை வழங்கி வருகிறது. உழுவை வாடகை திட்டம், சிறுபாசன திட்டம் என இருவேறு பிரிவுகளாக இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.
எனினும் இந்தத் திட்டங்களில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்து வந்தன. வேளாண்மை பொறியியல் துறை மூலமாக என்றால் மாவட்டத்தில் இரண்டு, மூன்று இடங்களில்தான் கிடைக் கும். எனவே இந்த திட்டங்களால் எல்லா பகுதி விவசாயிகளும் பயன்பெறுவதில் சிக்கல் உள்ளது.
இந்நிலையில், இந்தச் சிக்கல்களை அறவே அகற்ற வருவதுதான் கஸ்டம் ஹையரிங் சென்டர்கள். இது தொடர்பான அறிவிப்பை கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
“சாகுபடி செய்யப்படும் முக்கிய பயிர்களுக்குத் தேவையான அனைத்து வகையான வேளாண் கருவிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு நியாயமான வாடகைக்கு வழங் கவும், இந்த இயந்திரங்களை பழுது நீக்கவும் பொது மற்றும் தனியார் பங்கேற்புடன் 385 வட்டாரங்களிலும் ‘வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் மற்றும் இயந்திரங்கள், பழுது நீக்கும் சேவை மையங்கள்’ ரூ.126 கோடி செலவில் அமைக் கப்படும்” என்ற அந்த அறிவிப்பில் முதலமைச்சர் கூறியிருந்தார்.
அதன்படி வட்டாரத்துக்கு ஒன்று வீதம் உழவர்களின் பங்கேற்புடன் கூடிய கருவிகள் நிர்மாணிப்பு மையம் நிறுவப்பட உள்ளது என்கின்றனர் வேளாண் மை பொறியியல் துறை அதிகாரிகள். இதுகுறித்து இத்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், “ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துக்கு என்னென்ன வேளாண் பணிகளுக்கான கருவிகள் தேவைப்படுகிறதோ, அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளைக் கொண்டு குழுவை ஏற்படுத்தி, அந்தக் குழுவின் பெயருக்கு முழு மானியத்துடன் அந்தக் கருவிகள் வழங்கப்படும்.
அவற்றை அந்த குழுவே பராமரித்து தேவைப்படும் விவசாயிகளுக்கு அனுப்பி அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் வாடகை வசூலிக்கும் பணியை செய்யும். புது உபகரணங்கள் வாங்குவது. இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் இயக்கும் பணியாட் களுக்கு சம்பளம் கொடுப்பது போன்ற நிர்வாகப் பணிகளையும் குழுவே கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த திட்டம்.
இந்தத் திட்டத்தை செம்மையாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தற்போது வேளாண்மை பொறியியல் துறை மேற்கொண்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது” என்று அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.