Published : 04 Sep 2014 08:25 AM
Last Updated : 04 Sep 2014 08:25 AM

ராஜாதி ராஜன்!

இன்றோடு (செப்.4) ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்று ஓராண்டாகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது பொறுப்பேற்று அடுத்து வந்த நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியிலும் கவர்னராக நீடிக்கிறார். மோடி பதவியேற்றவுடன் இவர் மாற்றப்படக்கூடும் என்ற யூகங்கள் எழுந்தன. அவையனைத்தும் பொய்யாகிப் போனதற்குக் காரணம் இவரது கட்சி சார்பற்ற செயல்பாடுகள்தான் என்றால் அது மிகையல்ல.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையான சரிவைச் சந்தித்து வந்தபோது (2013 ஆகஸ்டில் ரூ. 68.85 என்ற நிலையிலிருந்தது) ரிசர்வ் வங்கி கவர்னராகப் பொறுப்பேற்று இன்று சரிவை தடுத்து நிறுத்தி, ரூபாயின் மதிப்பை ஸ்திரமடையச் செய்துள்ளார் ராஜன். கடந்த ஆண்டிலிருந்து இதுவரை டாலருக்கு நிகரான மதிப்பு ரூ. 8 வரை ஸ்திரமடையச் செய்துள்ளார். பல்வேறு விமர்சனங்கள், கடும் எதிர்ப்புகள் எழுந்தபோதிலும் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்காமல் நடவடிக்கை எடுத்தவர் ராஜன். 1935-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ரிசர்வ் வங்கியின் நிதி ஸ்திர கொள்கையின் அடிப்படையில் நிதி நிலையை ஸ்திரமடையச் செய்ததில் இவரது பங்கு அளப்பரியது. ஓராண்டில் மூன்று முறை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு 8 சதவீத அளவுக்கு உள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலை வாசியைக் குறைக்க வேண்டும் என்பதற்காக வட்டி விகிதத்தைக் குறைக்க முடியாது என உறுதியுடன் இருந்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில் நுகர்வோர் விலைக் குறியீட்டெண் பணவீக்கம் கடுமையாக உயர்ந்திருந்தது. அதையும் கட்டுப்படுத்தி விலைவாசி கடுமையாக உயராமல் தடுத்ததிலும் இவருக்கு முக்கிய பங்குண்டு.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளார். மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி யைத் தீர்மானிக்கும் காரணிகளில் முக்கிய பங்கு வகிக்கும் பங்குச் சந்தையிலும் ஸ்திரமான வளர்ச்சி எட்டப்பட்டது ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால்தான் என்றால் அது மிகையல்ல.

உர்ஜித் குழு பரிந்துரையை அமல்படுத்தியது, வங்கிக் கிளைகள் தொடங்குவதில் இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியது, ஐடிஎப்சி, பந்தன் கூட்டுறவு அமைப்பு ஆகியவற்றுக்கு வங்கி தொடங்க லைசென்ஸ் வழங்கியது, வெளிநாட்டு வங்கிகள் இங்கு துணை நிறுவனங்கள் அமைக்க அனுமதி அளித்தது, வங்கிக் கடன் வசூலிப்பை முடுக்கி விட்டது, வங்கிகள் பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே கடன் அளிப்பதைக் கட்டுப்படுத்தியது, முதலீட்டு வரம்புகளை தளர்த்தியது, நிறுவனங்கள் வெளிநாடுகளில் கடன் பெற அனுமதித்தது, பணவீக்கம் அடிப்படையிலான கடன் பத்திர வெளியீடு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் ஓராண்டில் இவர் மேற்கொண்டவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.

இந்திய நிதி நிலையை சீரமைப்பதில் ஐந்து முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 1. புதிய நிதிக் கொள்கையை வகுப்பது, 2. வங்கித் துறையை மேலும் வலுவாக்க வெவ்வேறு பிரிவுகளில் லைசென்ஸ் அளிப்பது, 3. நிதிச் சந்தையில் போதிய பணப் புழக்கத்துக்கு வகை செய்வது, 4. அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்கச் செய்வது, 5. கடன் சிக்கலிலிருந்து வங்கிகள் மீண்டும் திறமையாக செயல்படுவது. இந்த சீர்திருத்தங்களில் சிலவற்றை தன்னிச்சையாக ராஜனால் மேற்கொள்ள இயலாது. இதற்கு நமது அரசியல் அமைப்பில் பல்வேறு துறைகளின் அனுமதியை பெற்றாக வேண்டும். மன்மோகன் சிங் - சி. ரங்கராஜன், யஷ்வந்த் சின்ஹா பிமல் ஜலான் ஆகியோர் முறையே டெல்லி மற்றும் மும்பையில் பொறுப்பில் இருந்தபோது சுமுகமான உறவு இருந்தது. ஆனால் ப.சிதம்பரம் ஒய்.வி. ரெட்டி மற்றும் அவரைத் தொடர்ந்து டி. சுப்பாராவ் ஆகியோரிடையே கருத்து வேற்றுமை நிலவியது. ஆனால் மோடி அரசின் 100 நாள்களில் அருண் ஜேட்லி-ராஜன் இடையிலான உறவு சுமுகமாகவே உள்ளது. பொதுவாகவே உலகெங்கிலும் நிதி அமைச்சகத்துக்கும் மத்திய வங்கிக்கும் எப்போதுமே சுமுகமான உறவு இருந்தது கிடையாது. இதனால் இனிவரும் காலங்களில் ஜேட்லி-ராஜன் இடையிலான உறவைப் பொறுத்தே செயல்பாடுகள் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் நிதி சீர்திருத்த மசோதாவை ராஜன் ஏற்கெனவே கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் ரிசர்வ் வங்கி யூனியன் பிரதிநிதிகளையும் சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் ராஜனுக்கு உள்ளது. புதியவர்கள் அதி முக்கியமான பதவிகளில் நியமிக்கப்படுவதால் ஏற்கெனவே உள்ள மூத்த பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காமல் போகிறது என்ற குற்றச்சாட்டையும் யூனியன் சுமத்தியுள்ளது. இதைச் சமாளிக்க வேண்டிய சவாலும் ராஜனுக்கு உள்ளது.

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் அந்தஸ்தில் தலைமை செயல்பாட்டு அதிகாரி (சிஓஓ) நியமிக்கப்பட வேண்டும் என்ற ராஜனின் முயற்சிக்கு ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும் அதற்காக ஆர்பிஐ கொள்கைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் சிஓஓ நியமிக்கப்படாத நிலை தொடர்கிறது.

ஓராண்டில் சாதித்ததைவிட அவர் முன்பு உள்ள சவால்கள் அதிகம். தனது பதவிக்காலத்தில் அவற்றை திறமையாகச் செய்தால், ரிசர்வ் வங்கி கவர்னர்களில் ராஜாதி ராஜன் என்ற பெருமை இவரைச் சென்றடையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x