

தொழில்துறையில் நிலவும் ஸ்திர மற்ற நிலை காரணமாக தாமாக ஓய்வு பெறுவோர் (விஆர்எஸ்) எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பதன் மூலம் தங்களது செலவுகளைக் கட்டுக்குள் வைக்க முடியும் என நிறுவனங்கள் கருதுகின்றன. இதனால் தாமாக முன்வந்து ஓய்வுபெறுவது (விஆர்எஸ்) போன்ற வாய்ப்புகளை நிறுவனங்கள் முன்வைக்கும் என்று தெரியவந்துள்ளது.
எதிர்வரும் காலாண்டுகளில் இத்தகைய அறிவிப்புகளை நிறுவனங்கள் வெளியிடும் என்று தெரிகிறது. இத்தகைய அறிவிப் புகள் குறிப்பாக மின்னணு, பார்மா, பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு, ரசாயனம் உள்ளிட்ட துறைகளில் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களில் அசோக் லேலண்ட், நோக்கியா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விஆர்எஸ் திட்டத்தை செயல்படுத்தின.
நிறுவன சீரமைப்புத் திட்ட அடிப்படையின்கீழ் பணியா ளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து நஷ்டத்தின் அளவைக் குறைக்க பெரும்பாலான நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. இதற்காக ஊழியர்களுக்கு சில சலுகைகளுடன் கூடிய விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவிக்கின்றன. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக லே ஆஃப் விடுவது, ஊதிய செலவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த நினைக்கின்றன என்று ரான்ட்ஸ்டாட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மூர்த்தி கே உப்பலூரி தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு விஆர்எஸ் திட்டம் பிரபலமாக இருந்தது. இப்போது மீண்டும் தொழிலில் நிலவும் தேக்க நிலை காரணமாக இதைப் பின்பற்ற பல நிறுவனங்கள் முயல்கின்றன. இதன் மூலம் செலவைக் கட்டுப்படுத்தி, தொழிலை ஸ்திரப்படுத்திக் கொள்ள விரும்புகின்றன. தொழில் நிலை ஸ்திரப்படும் வரை இந்த நிலை தொடரும் என்று நிறுவனங்களுக்கு செயலர்கள் பதவிக்கு உரியவர்களைத் தேர்வு செய்து அளிக்கும் நிறுவனமான லைட்ஹவுஸ் நிறுவன நிர்வாகி ராஜீவ் பர்மன் தெரிவித்தார்.
இந்தியாவில் அரசுத் துறை நிறுவனங்கள் பெருமளவில் ஊழியர்களை வைத்திருந்தாலும் அவற்றின் செயல்பாடு குறிப்பிடும் வகையில் இல்லை. இதனால் அரசு நிறுவனங்களிலும் விஆர்எஸ் அறிவிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.
அனைத்துத் துறைகளிலும் விஆர்எஸ் அறிவிக்கப்பட்டாலும், அரசுத் துறை நிறுவனங்களில்தான் இது அதிக அளவில் செயல் படுத்தப்படுகிறது. இல்லையெனில் ஆள்குறைப்பு சாத்தியமாகாது என்று ஸ்பெக்ட்ரம் திறனறி நிறுவனத்தின் இயக்குநர் சித்தார்த் அகர்வால் தெரிவித்தார்.
ஒரு நிறுவனத்தில் 5 ஆயிரம் பணியாளர்களுக்கு விஆர்எஸ் அளிக்க பரிசீலிக்கப்பட்டது. ஆனால் இதற்கான பரிந்துரைக் குழுவோ 7 ஆயிரம் பேரை விஆர்எஸ் மூலம் வீட்டுக்கு அனுப்பலாம் என கூறியது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ. 350 கோடியை சேமிக்கலாம் என்றும் கூறியதாக அகர்வால் தெரிவித்தார்.
நிறுவன சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக விஆர்எஸ் திட்டத்தை நிறுவனங்கள் செயல் படுத்துகின்றன. இதன் மூலம் நிறுவனத்தை லாபகரமானதாக்க அவை முடிவு செய்கின்றன.
சில நிறுவனங்கள் சிட்டி வங்கி, பாங்க் ஆப் அமெரிக்கா உள்ளிட்டவற்றின் மூலம் முதலீட்டு ஆலோசனைகளை ஊழியர்களுக்கு அளிப்பதற்கும் ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் விஆர்எஸ் பெற்ற பிறகு எழும் மன உளைச்சலைத் தடுக்க வழி ஏற்படுத்தியுள்ளாக அவர் கூறினார்.