

மைண்ட் ட்ரீ நிறுவனர்களில் ஒருவரான எஸ்.ஜானகிராமன் கடந்த வாரம் அந்த நிறுவனத்திலிருந்து விலகி Nuvepro என்னும் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். பெங்களூரில் இருக்கும் அவர் தொலைபேசி வழியாக ’தி இந்து’வுக்கு அளித்த சிறப்பு பேட்டி.
15 வருடங்களாக இருந்துவிட்டு திடீரென ஏன் விலகுவதாக முடிவெடுத்தீர்கள்? மைண்ட் ட்ரீ நிறுவனர்களுடன் உங்களுக்கு எதாவது பிரச்சினையா?
இந்த முடிவு திடீரென எடுத்த முடிவு அல்ல. 2014 அக்டோபர் 20-ம் தேதி ஓய்வு பெற போகிறேன் என்பதை ஐந்து வருடங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டோம். 15 வருடங்களுக்கு முன்பு நாங்கள் ஆரம்பிக்கும்போதே புரபெஷனலாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்தோம்.
மேலும் அடுத்தகட்டத் தலை வர்களை உருவாக்கும் பணிகளை கடந்த சில ஆண்டுகளாகவே மேற் கோண்டு வருகிறோம். திருப்தியாகவே வெளியேறுகிறேன்.
மேலும் மைண்ட் ட்ரீ நிறுவனர்களுடன் எந்த விதமான பிரச்சினையும் கிடையாது. அனைவரிடத்திலும் நல்ல நட்பு இருக்கிறது. இப்போது இருக்கும் நிறுவனர்களை தாண்டி, சில வருடங்களுக்கு முன்பு வெளி யேறிய அசோக் சூட்டாவுடன் இன்னும் தொடர்பில்தான் இருக்கிறேன்.
மேலும் மைண்ட் ட்ரீ நிறுவனத்தில் என்னுடைய பங்குகள் இருக்கிறது. மைண்ட் ட்ரீ நல்ல நிறுவனம் என்பதால் அந்த பங்குகளை விற்கத்தேவை இல்லை.
உங்களிடம் எவ்வளவு மைண்ட் ட்ரீ பங்குகள் இருக்கின்றன?
தகவல்கள் என்.எஸ்.இ. இணைய தளத்தில் இருக்கிறது. (என்.எஸ்.இ தகவல்படி 2 சதவீத பங்குகள் அதாவது 16,70,274 பங்குகள் ஜானகிராமன் வசம் இருக்கிறது)
Nuvepro எந்த மாதிரியான நிறுவனம்?
மைண்ட் ட்ரீயில் பணியாற்றிய நபர்கள் கொடுத்த பல ஐடியாக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐடியா இது. கிளவுட் சம்பந்தமான புராடக்ட் பிஸினஸ் இது. நான் மட்டுமல்லாமல் மைண்ட் ட்ரீ-யிலிருந்து சில நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பிக்கப்போகிறோம். மைண்ட் ட்ரீ நிறுவனத்துக்கும் இதில் பங்கு இருக்கிறது.
அப்படியானால் மைண்ட் ட்ரீ நிறுவனத்திலிருந்தே இந்த ஐடியாவை செயல்படுத்தி இருக்கலாமே?
மைண்ட் ட்ரீ சர்வீசஸ் துறையில் இருக்கிறது. இது புராடக்ட் பிஸினஸ். 500 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பெரிய நிறுவனத்தில் இந்த சிறிய விஷயத்துக்கு சரியான முக்கியத்துவம் கிடைக்காது. தனியாக வரும் போதுதான் முக்கியத்துவம் கிடைக்கும்.