Published : 27 Jun 2019 04:13 PM
Last Updated : 27 Jun 2019 04:13 PM

அமெரிக்க பொருட்களுக்கு விதித்த கூடுதல் வரியை இந்தியா திரும்ப பெற வேண்டும்: ட்ரம்ப் ஆவேசம்

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 29 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி ஏற்க முடியாதது, உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

 

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கின் மீது 25 சதவீதமும், அலுமினியம் மீது 10 சதவீதமும் வரி விதிப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா அறிவித்தது. இந்தியாவிலிருந்து அதிக அளவில் உருக்கு, அலுமினியம் ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்த வரி விதிப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

அமெரிக்கா விதித்த கூடுதல் வரியால் 24 கோடி டாலர் அளவுக்கு கூடுதல் தொகையை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் பதிலுக்கு வரி விதிப்பை இந்தியா செயல்படுத்தாமலிருந்தது.

இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த பொதுப் பிரிவு சலுகையையும் அமெரிக்கா கடந்த ஜூன் 5-ம் தேதி ரத்து செய்தது. இதனால் இந்தியாவுக்கு 550 கோடி டாலர் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், அமெரிக்கா இதற்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லை. அதாவது இந்தியப் பொருட்கள் மீதான வரியை நீக்குவது குறித்து எந்த முடிவையும் அமெரிக்கா எடுக்காததால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 29 பொருட்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கு வரி விதிக்க இந்தியா முடிவு செய்தது.

ஆப்பிள், பியர்ஸ், தட்டையான உருக்கில் செய்யப்பட்ட பொருள்கள், டியூப் மற்றும் பைப் ஃபிட்டிங், ஸ்க்ரூ, போல்ட் மற்றும் ரிவிட் ஆகியவற்றின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 16 முதல் இந்தக் கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வந்தது.

இத்தகைய கூடுதல் வரி விதிப்பு மூலம் மத்திய அரசுக்கு 21 கோடி டாலர் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில், ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி, ட்ரம்ப் உள்ளிட்ட  உலகத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டின் இடையே பிரதமர் மோடியை ட்ரம்ப் சந்தித்து பேசுகிறார். அப்போது, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரி தொடர்பாக இரு தலைவர்களும் விவாதிக்க கூடும் எனத் தெரிகிறது.

 

முன்னதாக இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 29 பொருட்களுக்கு இந்தியா விதித்த கூடுதல் வரி  ஏற்க முடியாதது. இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும். பிரதமர் மோடியை சந்திக்கும்போது இதுபற்றி பேசுவேன்’’ எனக் கூறினார்.

 

அண்மையில் இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, இதுபற்றி இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x