Last Updated : 14 Jun, 2019 12:00 AM

 

Published : 14 Jun 2019 12:00 AM
Last Updated : 14 Jun 2019 12:00 AM

ஹெச்சிஎல் வழங்கும் டெக் பீ திட்டம்: பிளஸ் 2 மாணவர்களுக்கு பயிற்சியுடன் வேலை

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனம் மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ‘டெக் பீ' என்ற பெயரிலான இந்தத் திட்டத்தின்கீழ் பல்வேறு மாநிலங்களிலிருந்து பிளஸ் 2 தேர்ச்சிபெற்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் அளிப்பதற்காகஇத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் துணை தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்புசோதனை முயற்சியாக உத்தரப் பிரதேசத்திலும், தமிழகத்திலும் இத்திட்டம் செயல்படுத்திப் பார்க்கப்பட்டது. அதில் மிகச் சிறந்தபலன் கிடைத்துள்ளது. இதையடுத்து இதை பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட டெக் பீ திட்டத்தின்கீழ்700 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் தற்போது ஹெச்சிஎல் நிறுவனத்தில் பணி புரிகின்றனர். சிலர் மேற்படிப்பை தொடர்வதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வளவு பேர் இத்திட்டத்துக்கு தேவை என்று எண்ணிக்கை எதையும் இறுதி செய்யவில்லை. இருப்பினும், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து மாணவர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். வட இந்தியாவில் ஹரியாணா, உத்தரப் பிரதேசம், உத்திராகண்ட், மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளிலிருந்தும் டெக் பீ திட்டத்துக்கு மாணவர்களை தேர்வு செய்ய உள்ளதாகக் கூறினார்.

குறிப்பாக இந்தப் பகுதிகளில் மட்டுமே தங்கள் நிறுவனத்துக்கு மேம்பாட்டு மையங்கள் இருப்பதாகவும், அவற்றில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வசதியாக இருக்கும் என்பதால் இப்பகுதிகளிலிருந்து மாணவர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கணித பாடத்தை கட்டாயமாகக்கொண்டு பிளஸ் 2 வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்றுதேர்ச்சிபெற்ற மாணவர்கள் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இந்த மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சிக் காலத்தில் மாணவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை (ஸ்டைஃபண்ட்) வழங்கப்படும். பயிற்சி நிறைவு செய்த பிறகு மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ. 25ஆயிரம் ஊதியத்தில் அவர்களது திறமைக்கேற்ப பணி வழங்கப்படும். மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவர்கள் பிட்ஸ் பிலானி மற்றும் சாஸ்திரா பல்கலையில் படிக்கவும் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று அவர் குறிப்பிட்டார். தேர்வு செய்யப்படும் மாணவர்கள் கட்டாயம் 3 ஆண்டுகள் நிறுவனத்தில் பணி புரிய வேண்டும்என்பது முக்கிய நிபந்தனையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x