

தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து பெட்ரோல் நிலையங்களை நடத்தும் திட்டம் ஏதும் கிடையாது என்று பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்) அறிவித்துள்ளது. பெட்ரோல் நிலையங்களை சொந்தமாக விரிவுபடுத்த தேவையான கட்டமைப்பு வசதிகள் நிறுவனத்திடம் உள்ளதாக நிறுவ னத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ். வரதராஜன் தெரிவித்தார்.
மற்றொரு பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் (ஹெச் பிசிஎல்) ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அவற்றுக்குச் சொந்தமான பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் நிலையங்களை ஏற்று நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்தது.
பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சொந்தமாகவே போட்டிகளை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். இதற்காக தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேரும் எண்ணம் கிடையாது. மேலும் விநியோக நிலையங்களை தொடங்குவதற்குத் தேவையான முதலீடுகள் நிறுவனம் வசம் உள்ளதாக அவர் கூறினார்.
கடந்த நிதி ஆண்டில் பிபிசிஎல் நிறுவனம் 900 பெட்ரோல் நிரப்பு நிலையங்களைத் தொடங்கியது. இதன் மூலம் நிறுவனத்துக்குச் சொந்தமாக நாடு முழுவதும் 12,500 பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் உள்ளன. நடப்பு நிதி ஆண்டில் மேலும் பல நிலையங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
2006-ம் ஆண்டு டீசல் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த அரசு மறுத்துவிட்டது.
இதனால் தனியார் நிறுவனங் களான ரிலையன்ஸ் எஸ்ஸார் ஆகியன மானிய விலையில் டீசலை விநியோகிக்க முடியாது என்பதால் பெட்ரோல் நிலையங்களை மூடிவிட்டன.
இப்போது சந்தை விலைக்கு சமமான விலையில் டீசல் விற்பனை செய்யப்படுவதால், இந்நிறுவனங்கள் மீண்டும் பெட்ரோல், டீசல் விற்பனையில் ஈடுபட திட்டமிட்டுள்ளன.
மொசாம்பிக் மற்றும் பிரேஸிலில் தங்கள் நிறுவனம் அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ. 12 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது என்று வரதராஜன் கூறினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இவ்விரு எண்ணெய் வயல்களில் எண்ணெய் உற்பத்தி தொடங்கும் என்றார். பிபிசிஎல் நிறுவனத்தின் துணை நிறுவமான பாரத் பெட்ரோ ரிசோர்சஸ் (பிபிஆர்எல்) நிறுவனத்துக்கு பிரேசில், மொசாம்பிக், இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவில் உள்ள எண்ணெய் வயல்களில் பங்கு உள்ளது.
கொச்சியின் சுத்திகரிப்பு ஆலை ரூ. 16,500 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். நாடுகளுக்கு இடையிலான எண்ணெய் குழாய்ப் பாதையை பிபிசிஎல் அமைக்க உள்ளது.
நிறுவனத்தின் துணை நிறுவ னமான நும்லிகர் சுத்திகரிப்பு ஆலை 170 கி.மீ. தூர குழாய்ப்பாதையை மேற்கு வங்கத்திலிருந்து வங்கதேசத்தின் பர்பாதிபூருக்கு இடையே அமைக்க உள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் வங்கதேச சந்தையையும் பிபிசிஎல் பிடிக்கும் வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.