

வரலாறு காணாத வகையில் தங்கத்தில் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் அதன் விலை ரூ.344 உயர்ந்து ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 26,464 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், சென்னையில் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.33 உயர்ந்து ரூ.3,308 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுவே, நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.3 ஆயிரத்து 265க்கு விற்கப்பட்டது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.26,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச அளவில் கடந்த சில தினங்களாகவே திடீரென தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், இன்றும் விலை அதிகரித்துள்ளது.
அதேபோல 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.27 ஆயிரத்து 712 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் விலை உயர்ந்து 41 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை ஆகிறது.
என்ன காரணம்?
அமெரிக்க மைய வங்கி இந்த ஆண்டில் வட்டியைக் குறைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்க -சீனா வர்த்தகப் போரால் உலகப் பொருளாதாரம் மந்தகதியில் இருப்பது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது ஆகிய காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதனால்தான் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை, பவுன் ஒன்றுக்கு 1,408 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.