நரேந்திர மோடி, பில் கேட்ஸ் சந்திப்பு

நரேந்திர மோடி, பில் கேட்ஸ் சந்திப்பு
Updated on
1 min read

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு முன்பாக அவர் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு மற்றும் நிதின் கட்கரியுடன் ஆலோசனை நடத்தினார்.

வெங்கய்ய நாயுடுவுடனான சந்திப்புக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேட்ஸ், பிரதமர் மோடி தலைமையிலான அரசில் உள்ள அமைச்சர்கள் மக்களுக்கு மிகச் சிறந்த சுகாதார வசதியை அளிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது தெரிய வந்ததாகக் குறிப்பிட்டார். அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதியை அளிப்பதற்காக புதிய அணுகுமுறையை வகுப்பதோடு அதுகுறித்த விழிப்புணர்வை உருவாக்கவேண்டியது குறித்தும் ஆலோசித்ததாகக் குறிப்பிட்ட அவர், புதிய தொழில்நுட்பத்தை அளிப்பதில் அரசுடன் இணைந்து செயல்படுவதற்கு தாங்கள் தயாராக உள்ளதாகக் கூறினார்.

அரசுடனான தங்களது கூட்டணி மிகவும் வலுவானது என்றார் கேட்ஸ். மக்களுக்கு கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தருவதற்கு முன்பாக அவர்களின் செயல்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியம் என்று கேட்ஸ் சுட்டிக் காட்டினார்.

போலியோவை முற்றிலுமாக ஒழித்ததை பாராட்டிய கேட்ஸ், இதேபோல பல்வேறு நோய்களுக்கான தடுப்பு மருந்து திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்த உள்ளது மிகவும் பாராட்டுக்குரிய செயல் என்றார்.

இது குறித்து வெங்கய்ய நாயுடு கூறியது: இந்தியாவில் பில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மிகப் பெரிய அளவில் தொண்டுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். அனைவருக்கும் சுகாதார வசதியை அளிப்பது தொடர்பாக புதிய வழிமுறைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களும் ஆராயப்பட்டது என்றார் நாயுடு.

முன்னதாக வியாழக்கிழமை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை கேட்ஸ் சந்தித்தார். அத்துடன் இந்தியாவின் புதிய செயல்திட்ட (ஐஎன்ஏபி) தொடக்க விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனும் பங்கேற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in