Published : 28 Sep 2014 01:18 PM
Last Updated : 28 Sep 2014 01:18 PM

இந்தியாவின் முதலாவது தொழிற்பயிற்சி பல்கலை தொடக்கம்

இந்தியாவின் முதலாவது தொழிற்பயிற்சி பல்கலைக் கழகம் புனேயில் தொடங்கப்பட்டுள்ளது. தொழில் திறன் மிக்க இளை ஞர்களை உருவாக்கும் நோக்கில் குஜராத் மாநில அரசும் மனித வள நிறுவனமான டீம் லீஸ் நிறுவனமும் இணைந்து இந்த பல்கலைக் கழகத்தை உருவாக்கியுள்ளது. இந்த பல்கலைக் கழகத்தில் 4 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.

டீம்லீஸ் ஸ்கில்ஸ் பல்கலைக் கழகம் (டிஎல்எஸ்யு) முதல் கட்டமாக மூன்று பிரிவுகளில் சிறப்பு பயிற்சிகளை அளிக்கிறது. மெகடிரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஹார்ட்வேர், நிதி மற்றும் வர்த்தக செயல்பாடு குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. வரும் காலங்களில் சில்லறை வர்த்தகம் மற்றும் ஹோட்டல் நிர்வாகம் குறித்த பயிற்சிகளையும் அளிக்க உள்ளது. இந்த பல்கலைக் கழகத்தில் இப்போது 20 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் முதல் முறையாக தொழில் பயிற்சி பல்கலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பல்கலைக் கழகத்தின் செயல்பாடு மற்றும் இதுகுறித்து வெளியாகும் விமர்சனங்களின் அடிப்படையில் இதை படிப்படியாக விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளதாக பல்கலைக் கழக இணை நிர்வாகி ரிதுபர்னா சக்ரவர்த்தி தெரிவித்தார். அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்நிறுவனம் ரூ. 50 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

டிஎல்எஸ்யு பல்கலை கார்ப்பரேட் கல்வி, கிளவுட் அடிப்படையிலான பயிற்சி, என்இடிஏபி (பயிற்றுநர் பயிற்சித் திட்டம்) மற்றும் வளாக பயிற்சி உள்ளிட்டவற்றை அளிக்கிறது.

அமெரிக்காவில் செயல் படும் சமுதாயக் கல்லூரி அடிப்படையில் இது உருவாக் கப்பட்டுள்ளது. இளங்கலைப் பட்டம் பெறும் வகையில் 6 பருவத் தேர்வுகளைக் (செமஸ்டர்) கொண்டது. நான்கு செமஸ்டர்களைப் பூர்த்தி செய்த மாணவருக்கு அசோசியேட் பட்டம் வழங்கப்படும். முதலாண்டு முடிக்கும் மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் வழங்கப்படும்.

தொழில்கல்வி பயில சேரும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்ப தில்லை.

மாணவர்களுக்கு அவர் களது வசதிக்கேற்ப படிப்பு மற்றும் தொழிற்கல்வியைக் கற்றுத் தருவதே பிரதான நோக்கம் என்று சக்ரவர்த்தி கூறினார். இதனால் முதலாண்டு முடித்த மாணவர்களுக்கு பயிற்சி முடிப்பு சான்றிதழ் அளிக்கப்படும். அவர் அதைக் கொண்டு வேலையில் சேர முடியும். மீண்டும் தனது படிப்பைத் தொடர விரும்பினால் அவர் முதலாண்டில் சேர வேண்டியதில்லை. அவர் இரண்டாம் ஆண்டு படிப்பைத் தொடரலாம். இதேபோல விடுபட்ட ஆண்டிலிருந்து படிப்பைத் தொடரலாம்.

தாற்காலிக பணி வழங்குவதில் டீம் லீஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தின் மூலம் ஒரு லட்சம் பேர் பல்வேறு நிறுவனங்களில் பணி புரிகின்றனர். திறமையான பணியாளர்களுக்கான தட்டுப்பாட்டை போக்குவதற்காக இந்த தொழிற்பயிற்சி பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில்தான் பள்ளிக் கல்வியை பாதியில் விடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 12-வது படிப்பை எட்டுவதற்குள் 10 மாணவர்களில் 6 பேர் படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.

இந்தியாவில் உயர் பதவிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பணிகளை மட்டுமே உள்ளடக்கியதாக கல்வி முறை உள்ளது.

ஆனால் இதன் மூலம் வேலை வாய்ப்பு பெறுவோர் 8 சதவீதம் மட்டுமே. 92 சதவீதம் பேருக்கு பிற தொழில்களின் மூலம்தான் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

இந்த தொழில் கல்வியைப் பயில ஒரு செமஸ்டருக்கு ரூ. 22 ஆயிரம் கட்டணமாகும். இத்தொகையை மாணவர்கள் செலுத்துவதற்கு வசதியாக சில நிதி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருவதாக ரிது பர்னா தெரிவித்தார்.

இந்த பல்கலையில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 2-வுக்கு இணையான கல்வித் தகுதி மற்றும் தொழில் பயிற்சி தகுதியை இந்த பல்கலைக் கழகம் அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x