Published : 22 Mar 2018 09:17 AM
Last Updated : 22 Mar 2018 09:17 AM

சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் இடங்கள்: உலக அளவில் புதுடெல்லிக்கு 22-வது இடம்

சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்துசேரும் இடங்களில் புதுடெல்லிக்கு உலக அளவில் 22-வது இடமும் ஆசிய அளவில் 8-வது இடமும் கிடைத்துள்ளது. டிரிப் அட்வைசர் நிறுவனத்தின் டிராவலர்ஸ் சாய்ஸ் விருதுகளில் இந்தத் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

உலக அளவில் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் 25 இடங்களின் பட்டியலில் இந்தியாவின் தலைநகரமான டெல்லி 22-வது இடத்தைப் பிடித்துள்ளது. முகலாய தூபிகள், காலனியாதிக்க கால கட்டிடங்கள் மற்றும் கலாசாரம் போன்றவை புதுடெல்லியின் சிறப்பம்சங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரம் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதனை அடுத்து இங்கிலாந்தின் லண்டன் , இத்தாலியின் ரோம், இந்தோனேஷியாவின் பாலி மற்றும் கிரீஸின் கிரீட் (Crete) ஆகிய நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

சுற்றுலா தலங்களில் அமைந்துள்ள ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் இடங்களுக்கு கிடைத்துள்ள விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகளின் தரம் மற்றும் அளவை முன்வைத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. டிரிப் அட்வைசர் தளத்தில் பயணிகள் எந்த இடத்தைத் தேர்வு செய்ய அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. சுமார் 12 மாத காலம் இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 42 வகையான பட்டியல்கள் வெளியிடப்பட்டு 402 நகரங்கள் கெளரவிக்கப்பட்டுள்ளன. ஆசிய அளவிலான பட்டியலில் டெல்லி, கோவா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் டெல்லி 8-வது இடத்திலும், கோவா 9-வது இடத்திலும், ராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூர் 16-வது இடத்திலும் உள்ளன.

அழகிய கடற்கரைகள், கவர்ச்சியான இரவு வாழ்க்கை ஆகியவை கோவாவின் சிறப்பு அம்சங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. கலாசாரம், உணவு வகைகள் மற்றும் கட்டிடக்கலை ஆகியவை ‘பிங்க் சிட்டி’ என அழைக்கப்படும் ஜெய்ப்பூரின் சிறப்புகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. ஆசிய அளவில் இந்தோனேஷியாவின் பாலி முதலிடத் தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து தாய்லாந்தின் புக்கெட், வியட்நாமின் ஹனோய், ஜப்பானின் டோக்கியோ, நேபாளின் காத்மண்டு மற்றும் ஹாங்காங் ஆகிய நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x