Published : 21 Mar 2018 08:45 AM
Last Updated : 21 Mar 2018 08:45 AM

விரைவில் புதிய தொலைத் தொடர்புக் கொள்கை: மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா தகவல்

புதிய தொலைத் தொடர்புக்கொள்கை தயாராகிவிட்டதாகவும் அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறினார்.

டெல்லியில் நடைபெற்ற `தீன்தயாள் ஸ்பார்ஷ் யோஜனா’ விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது: புதிய தொலைத் தொடர்புக் கொள்கை விதிமுறைகள் அனேகமாக முழுமையாகத் தயாராகிவிட்டன. இம்மாத இறுதியில் தொலைத் தொடர்புத் துறை இணையதளத்தில் அது வெளியிடப்பட்டு பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்படும். இதையடுத்து அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அது அறிமுகம் செய்யப்படும்.

சமீபத்தில் தொலைத் தொடர்புத் துறைக்கு சலுகைகள் வழங்கப்பட்டன. இதன்படி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதேபோல ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான உச்சபட்ச அளவும் தாராளமாக்கப்பட்டது. இது இத்துறையினருக்கு மிகுந்த பயனளிக்கும் சலுகையாகும். தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டண பாக்கியை புதிய சலுகை அடிப்படையிலோ அல்லது ஏற்கெனவே உள்ள விதிமுறைகளின்படியோ செலுத்தலாம். ஸ்பெக்ட்ரம் கட்டணத் தொகை 10 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும் என்றிருந்தது 16 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்புத்துறையின் வெற்றிப் பயணம் தொடரும். அதேபோல இந்தியாவில் தொலைத் தொடர்பு இணைப்பு எவ்வித இடையூறுமின்றி கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உச்சபட்ச அளவு வரம்பு தளர்த்தப்பட்டுள்ளதால் வோடபோன்-ஐடியா இணைப்பு சாத்தியமாகும். ஏனெனில் தற்போது உள்ள உச்சபட்ச அளவால் இரு நிறுவனங்களும் இணையும்போது அவற்றிடம் கூடுதல் அளவில் ஸ்பெக்ட்ரம் இருக்கும். இப்போது அலைக்கற்றைக்கான உச்சபட்ச அளவு தளர்த்தப்பட்டுள்ளதாக சின்ஹா குறிப்பிட்டார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x