

பங்குச் சந்தையில் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக் கிழமையன்று எழுச்சி காணப் பட்டது. இதற்கு ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் (எஸ் அண்ட் பி) நிறுவனம் வெளியிட்ட அறிக்கை முக்கிய காரணமாகும். இந்தியாவின் நிதி நிலை ஸ்திரமாக உள்ளதாகவும், கடனை திருப்பி செலுத்தும் திறன் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட் டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீத அளவுக்கு இருக்கும் என்ற அறிக்கை காரணமாக பங்குச் சந்தையில் 157 புள்ளி உயர்ந்தது. இதனால் குறியீட்டெண் 26626 புள்ளிகளைத் தொட்டது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 57 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 7968 புள்ளிகளானது.
வங்கிப் பங்குகளில் எஸ்பிஐ பங்கு அதிகபட்சமாக 2.71 சதவீதமும், ஆக்சிஸ் வங்கி பங்கு 3 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி பங்கு 0.76 சதவீதமும், ஹெச்டிஎப்சி வங்கி பங்கு 2.35 சதவீதமும் உயர்ந்தன. கடந்த இரண்டு தினங்களாக சரிவைச் சந்தித்த உலோகத்துறை பங்குகள் மீண்டும் எழுச்சி பெற்று லாபமீட்டும் பங்குகளாக மாறின.
ஹிண்டால்கோ நிறுவனப் பங்கு 5.25 சதவீதமும், டாடா ஸ்டீல் 3.10 சதவீதமும், ஸ்டெர்லைட் 0.49 சதவீதமும் உயர்ந்தன. ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனப் பங்கு மீண்டெழுந்து 5.20 சதவீதம் லாபமீட்டியது. சன் பார்மா, சிப்லா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, விப்ரோ ஆகிய நிறுவனப் பங்குகள் லாபமீட்டின. அதேசமயம் டாக்டர் ரெட்டி, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், கெயில், ஹீரோ மோட்டோகார்ப், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி ஆகிய பங்குகள் அதிகபட்சம் 2.69 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 19 நிறுவனப் பங்குகள் லாபமீட்டின. 11 நிறுவனப் பங்குகள் கணிசமான நஷ்டத்தைச் சந்தித்தன.
உலோக பங்குக்கு அடுத்தபடியாக ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகள் லாபமீட்டின. எஸ் அண்ட் பி நிறுவன அறிக்கை வெளியான பிறகு பங்குச் சந்தை சூடுபிடித்தது. மொத்தம் 1,552 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின.