Published : 04 Mar 2018 12:57 PM
Last Updated : 04 Mar 2018 12:57 PM

வங்கிகளை தனியார் மயமாக்க வேண்டாம்: நிதி அமைச்சர் அருண்ஜேட்லிக்கு வங்கி ஊழியர் சங்கம் வேண்டுகோள்

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை மேற்கொள்ள வேண்டாம் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் மத்திய நிதி அமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளன.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சமீபத்தில் ரூ. 12,600 கோடி நிதி முறைகேடு நிகழ்ந்ததை அடுத்து வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்தே இந்தியதேசிய வர்த்தக யூனியன் காங்கிரஸின் (ஐஎன்டியுசி) அங்கமான இந்திய தேசிய வங்கி ஊழியர் சம்மேளனம் (ஐஎன்பிஇஎப்) மத்திய நிதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில்,

தனியார் மயமாக்கும் முடிவு பல்வேறு விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், வங்கிக் கிளைகளின் மிகப் பெரிய ஒருங்கிணைப்பை முற்றிலுமாக சிதைத்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:

வங்கிகள் தனியார் வசம் விடப்பட்டால் அது மிகப்பெரும் பின் விளைவுகளை ஏற்படுத்தும். அது வங்கிக் கிளைகளால் உருவாக்கப்பட்டுள்ள மிகப் பெரிய ஒருங்கிணைப்பை முற்றிலுமாக அழித்து விடும். நாடு முழுவதும் வங்கிக் கிளைகள் பரந்து விரிந்துள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு கிடைத்துவரும் வங்கிச் சேவை தடைபடும்.

வங்கிச் செயல்பாடுகளில் சில ஓட்டைகள் உள்ளன. இதன் காரணமாகவே முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. இதற்குக் காரணம் வங்கிகளை கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி, அதிக அளவிலான கடன் வழங்கும் கணக்குகளை கண்காணிக்கத் தவறியதுதான்.

2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ரிசர்வ் வங்கி கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ரா ஓய்வு பெற்றார். ஆனால் அவரது பதவி நிரப்பப்படவில்லை என்றும் ஊழியர் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

வங்கி வாரியம், ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் வெளிப்படையானதாக ரகுராம் ராஜன் காலத்தில் இருந்தன. இது வெளிப்படையாகவும், பரவலாகவும் அனைவராலும் ஏற்கப்பட்டது. இப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னரின் காலத்தில் இது எப்படி உள்ளது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வங்கி செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்தார். வங்கி நிர்வாகிகள், தணிக்கையாளர்களால் இத்தகைய மோசடியை கண்டுபிடிக்க முடியாமல் போனது எவ்வாறு என்று கேள்வியெழுப்பியிருந்தார். வங்கி மோசடிகளுக்கு அரசியல்வாதிகள்தான் பொறுப்பு என்றால் தணிக்கையாளர்கள் எங்கே போனார்கள் என்றும் அவர் கேட்டிருந்தார்.

வங்கிகளில் உள் தணிக்கை மற்றும் வெளித் தணிக்கை என இருவகை தணிக்கைகள் நடைபெறும் நிலையில் இது கவனிக்காமல் விடுபட்டு போனது எப்படி என்றும் ஜேட்லி கேள்வியெழுப்பியிருந்தார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டுமின்றி, பாங்க் ஆப் பரோடா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், கார்ப்பரேஷன் வங்கி ஆகிய வங்கிகளிலும் முறைகேடு நடந்திருப்பது தற்போது வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் தனியார் மயமாக்கும் முடிவை அரசு எடுக்கும் என்பதால் விளக்கம் அளித்துள்ள ஊழியர் சங்கம், 21 தனியார் வங்கிகள் இந்தியாவில் செயல்படும் காலத்தை விட 20 பொதுத்துறை வங்கிகளும் பல ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. மேலும் உலகம் முழுவதும் நிதி நெருக்கடி நேரும்போதெல்லாம் அதை பொதுத்துறை வங்கிகள்தான் சீர் செய்துள்ளன. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் 2008-ம் ஆண்டில் அமெரிக்காவில் மிகப் பெரிய நிதி நெருக்கடி நேர்ந்தபோது, அதிலிருந்து மீள பெரிதும் உதவியவை பொதுத்துறை வங்கிகள்தான் என்று குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவில் தனியார் வங்கிகள் தோல்வியடைந்தன அல்லது பிற வங்கிகளுடன் இணைந்தன என்றும் வங்கி ஊழியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. -ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x