

தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் சரிந்து முடிவடைந்தன. நிலக்கரி சுரங்கங்கள் மீதான தீர்ப்பு வந்தவுடன் நிப்டி 8000 புள்ளிகளுக்கு கீழே சென்றது. அதிகபட்சமாக 7950 புள்ளிகளுக்கு சரிந்த நிப்டி வர்த்தம் முடியும்போது 8000 புள்ளிகளுக்கு மேலே முடிந்தது.
சென்செக்ஸ் 31 புள்ளிகள் சரிந்து 26744 புள்ளியில் முடிவடைந்தது. ஆனால் வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 215 புள்ளிகள் சரிந்தது. நிப்டி 15 புள்ளிகள் சரிந்து 8002 புள்ளியில் முடிவடைந்தது. அதே சமயத்தில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடு கடுமையாக சரிந்து முடிவடைந்தது. மிட்கேப் குறியீடு 1.2 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 1.6 சதவீதமும் சரிந்து முடிவடைந்தன. இதற்கிடையே செவ்வாய்க்கிழமை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 1,185 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்றிருக்கிறார்கள்.
துறைவாரியாக பார்க்கும் போது கேபிடல் குட்ஸ் குறியீடு அதிகபட்சமாக 1.69% சரிந்து முடிவடைந்தது. இதேபோல கன்ஸ்யூமர் டியூரபிள், வங்கி உள்ளிட்ட குறியீடுகளும் சரிந்து முடிவடைந்தன. மாறாக எப்.எம்.சி.ஜி. குறியீடு 1.75 % உயர்ந்து முடிவடைந்தது.
ஹெல்த்கேர் மற்றும் ஆயில் அண்ட் காஸ் குறியீடுகளும் உயர்ந்து முடிவடைந்தன. சென்செக்ஸ் பங்குகளில் கோல் இந்தியா, ஹெச்.யூ.எல்., சிப்லா, ஐடிசி மற்றும் விப்ரோ ஆகிய பங்குகள் அதிகம் உயர்ந்தும், எஸ்.பி.ஐ, டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, பி.ஹெச்.இ.எல் மற்றும் டிசிஎஸ் ஆகிய பங்குகள் சரிந்தும் முடிவடைந்தன.
மெட்டல் பங்குகள் கடும் சரிவு
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததன் காரணமாக மெட்டல் துறை பங்குகள் கடுமையாக சரிந்திருக்கின்றன. இதில் உஷா மார்டீன் மற்றும் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் ஆகிய இரண்டு நிறுவனங்களின் பங்குகள் 10% அளவுக்கு சரிந்தன.