Published : 10 Mar 2018 03:21 PM
Last Updated : 10 Mar 2018 03:21 PM

கார், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி: ஐஆர்டிஏ புதிய அறிவிப்பு

 

கடந்த 2 ஆண்டுகளாக கார், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ‘தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ்’ கட்டணம் உயர்த்தப்பட்டு வந்தநிலையில், 2018-19 ஆம்ஆண்டு இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைத்து இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ) உத்தரவிட்டுள்ளது.

இருசக்கர வாகனம், கார் வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பேர் காப்பீடு மூலம் இழப்பீடு கோருகிறார்கள், இழப்பு கொடுக்கப்படும் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2018-19 ஆம் ஆண்டுக்கான மாற்றி அமைக்கப்பட்ட கார், இருசக்கர வாகனம், சரக்கு வாகனங்களுக்கான ‘தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ்’ கட்டணத்தை இந்திய காப்பீடு ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி 1000 சிசி திறனுக்கு அதிகம் இல்லாத கார்களுக்கு ‘தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ்’ கட்டணம் ரூ.1,850 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.2,055 ஆக இருந்தது.

இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை 75சிசி திறனுக்கு மிகாமல் இருக்கும் வாகனங்களுக்கான ‘தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ்’ கட்டணம் ரூ.427 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2017-18-ம் ஆண்டு ரூ.569 ஆக இருந்தது.

75 சிசி முதல் 150 சிசிக்குள் இருக்கும் இருசக்கர வாகனங்களுக்கான ‘தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ்’ கட்டணம் கடந்த ஆண்டு இருந்த ரூ.720 என்ற அளவில் இருந்து மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

1000 சிசி முதல் 1500 சிசிக்குள் இருக்கும் தனிமனிதர்கள் பயன்படுத்தும் கார்களுக்கான தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் கட்டணம் ரூ.2,863 ஆக இருக்கிறது. இது கடந்த ஆண்டு கட்டணத்தில் இருந்து மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

அதேசமயம், 1500 சிசிக்கு அதிகமாக இருக்கும் கார்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் ரூ.7,890 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சரக்கு வாகனங்களைப் பொறுத்தவரை, 7500 கிலோ முதல் 12 ஆயிரம் கிலோ, 12 ஆயிரம் கிலோ முதல் 20 ஆயிரம் 40 ஆயிரம் கிலோ எடைக்கு மேல் சுமக்கும் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தில் கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட கட்டணமே இந்த ஆண்டும் செயல்படுத்தப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x