Last Updated : 25 Sep, 2014 10:54 AM

 

Published : 25 Sep 2014 10:54 AM
Last Updated : 25 Sep 2014 10:54 AM

எங்கும் எதிலும் அனலிடிக்ஸ்

பெரும்பாலோனர் மத்தியில் அனலிடிக்ஸ் குறித்து ஒரு பிரம்மாண்டமான எண்ணம் இருக்கின்றது. அனலிடிக்ஸ் ஒரு மேஜிக்கான விஷயம் - கிட்டத்தட்ட அலாவுதீனின் அற்புத விளக்கைப்போன்ற ஒரு விஷயம். அதை உபயோகித்தால் நினைத்த காரியம் அனைத்திலும் ஜெயமே! எனவே, எப்பாடுபட்டாவது அனலிடிக்ஸ்தனை நம்முடைய கம்பெனிக்குள் நடைமுறைக்கு கொண்டுவந்துவிடும் பட்சத்தில் பணம் கொட்டோகொட்டு என்று கொட்டிவிடும் என்று நினைக்கிறார்கள்.

இது ஒரு தவறான நினைப்பே! முதலில் ஒரு பிசினஸ் அனலிடிக்ஸை உபயோகித்து என்னென்ன விஷயங்களை அறிந்துகொள்ள முடியும் என்பதை நிறுவனங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிசினஸின் ரிஸ்க்குகள், பிசினஸில் இருக்கும் வாய்ப்புகள், பிசினஸ் எதிர்கொள்ள வாய்ப்பிருக்கும் ஏமாற்று வேலைகள் மற்றும் நம்முடைய பிசினஸ் தரும் பொருட்கள் மற்றும் சர்வீஸிற்கான டிமாண்ட் என்ற நான்கு விஷயங்களும் பல்வேறு விகிதாச்சாரங்களில் ஒருங்கிணைந்த எக்கச்சக்கமான காம்பினேஷன்களின் காரண காரியங்களை மட்டுமே அனலிடிக்ஸின் மூலம் ஒரு பிசினஸால் அறிந்துகொள்ள முடியும்.

தொழில் வியூகம் முக்கியம்

இந்த விஷயங்கள் அனைத்துமே ஒரு பிசினஸில் நடைமுறை (ஆபரேஷன்) சம்பந்தப்பட்டவைதான். தொழில் வியூகம் (ஸ்ட்ராட்டஜி) சம்பந்தப்பட்டவையல்ல. ஒரு செயலைச் செய்துவிட்டு ஏன் இதைச் செய்தோம் என்பதை நியாயப்படுத்தவும், ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் போது இதனால்தான் இந்த நடவடிக்கை எடுக்கின்றோம் என்பதை தெரிந்து செய்யவும், தொழில் செய்யும்போது இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் இதைச் செய்தால் சரியாகிவிடும் என்ற வழிகாட்டுதல்தனைப் பெறவுமே அனலிடிக்ஸ் பெருமளவுக்கு உதவுகின்றது.

ஒரு தொழிலில் பணத்தை கொண்டு வந்து கொட்டுவதில் பெரும்பங்கு வகிப்பது தொழில் வியூகம்தானே தவிர நடைமுறையல்ல என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும் அல்லவா? தொழிலில் பணம் சம்பாதித்து தருவதில் நடைமுறைக்கு சரியான பங்கு இருக்கின்றது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது என்றாலுமே வெற்றியை வகுத்துத்தருவது வியூகம் மட்டுமே. அதனை பாதுகாத்து மேன் மேலும் எடுத்துச்செல்ல உதவுவது நடைமுறையில் இருக்கும் புத்திசாலித்தனம் மட்டுமே என்று சொல்லலாம்.

சரியான நபர்கள் தேவை

‘லிங்கா’ ரிலீஸாகும் தேதியன்று நாம் இருவரும் சேர்ந்து பைனான்ஸ் செய்து நீங்கள் ஹீரோவாகவும் நான் வில்லனாகவும் நடித்து எடுத்த படத்தை ரிலீஸ் செய்வது வியூகத்தின் தவறேயன்றி வேறெதுவும் இல்லை. இல்லையா? அதனாலேயே தொழில் வியூகம் குறித்த நடவடிக்கைகளுக்கு அனலிடிக்ஸை உபயோகிக்க முயல்வது சரியாய் இருக்காது எனலாம்.

இப்படி முழுக்க முழுக்க ஆபரேஷன் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுப்பதற்கு அனலிடிக்ஸை உபயோகப்படுத்துகின்றோம் என்பதால் அனலிடிக்ஸை கையாள்வதற்கு அந்தந்தத் தொழிலின் குணாதிசியங்களை முழுமையாகப் புரிந்துகொண்ட நபர்கள் அவசியம் தேவைப்படுகின்றார்கள். ஒவ்வொரு தொழிலும் அதன் அளவுக்கு தகுந்தாற்போல் வெவ்வேறு குணாதிசியங்களைக் கொண்டது. ஒரே ஒரு இடத்தில் கடைவைத்து வியாபாரம் செய்து பழம்பெரும் பெயரைப் பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா வியாபாரமும் ஸ்வீட் வியாபாரமே.

தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, புதுதில்லி என பல ஊர்களிலும் கிளைகளைக் கொண்டிருக்கும் பிரசித்தி பெற்ற அடையாறு ஆனந்த பவன் நிறுவனத்தின் வியாபாரத்திலும் ஸ்வீட்தான் இருக்கின்றது. இரண்டு நிறுவனங்களுடைய வியாபாரமும் வெவ்வேறு ஆபரேஷன் (அன்றாட செயல்பாடுகள்) தேவைகளைக் கொண்டதாக இருக்கும் இல்லையா? இங்கேதான் டொமைன் ஸ்பெஷலிஸ்ட் முக்கியத்துவம் பெருகின்றார்.

திருமணத்துக் வரன் தேடித்தரும் மேட்ரிமோனி இணையதளங்கள் கூட இன்றைக்கு அனலிடிக்ஸ் சாப்ட்வேர்களை உபயோகித்து இந்த வரன் நீங்கள் நினைக்கும் விதத்தில் இருக்கலாம் என்ற தகவலை பதிவுசெய்தவர்களுக்குத் தருகின்றன. அனலிடிக்ஸ் செய்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து உன்னை மணமுடித்தேன் என்று இன்றைக்கே பலஜோடிகள் பேசிக்கொள்ளுமளவுக்கு அனலிடிக்ஸின் உபயோகம் இந்தத் துறையில் இருக்கின்றது எனலாம்.

மேட்ரிமோனி தொழிலில் சமூக, உளவியல் மற்றும் கலாச்சார விஷயங்கள் முழுவதுமாகத் தெரிந்த டொமைன் ஸ்பெஷலிஸ்ட்களின் திறமை தேவைப்படும் இல்லையா? அட! டைவர்ஸ் கேசெல்லாம் வருதப்பா? என சினிமாவில் அரசியல்வாதியாய் மிடுக்கு காண்பிக்கும் கவுண்டமணி கலாய்ப்பது போல் அனலிடிக்ஸ் சாப்ட்வேர்கள் ஒரு தம்பதியருக்குள் டிவோர்ஸ் நடக்குமா (டிவோர்ஸ்360.காம் – இப் இட் இஸ் ஓவர் வாட் இஸ் நெக்ஸ்ட் –பைலைன் சூப்பராய் இருக்குதே!) என்றெல்லாம் கணக்குப்போட்டு சொல்கின்றதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

டொமைன் ஸ்பெஷலிஸ்ட்

தொழில் குணாதிசியங்கள் மற்றும் தொழிலின் அளவு போன்ற பல்வேறு வித்தியாசங்கள் இருந்த போதிலும் ஒவ்வொரு டொமைனிலும் அதன் தேவைக்கேற்ப வல்லுநர்கள் இருக்கவே செய்வார்கள். அவர்கள்தான் இதுபோன்ற நிறுவனங்களின் அனலிடிக்ஸ் தேவைக்கு முக்கிய நபர்கள் ஆவார்கள். மேலும், இந்த டொமைன் ஸ்பெஷலிஸ்ட்களே அனலிடிக்ஸின் மூலம் கிடைக்கும் அபூர்வமான அறிவை எப்படி அந்தத் தொழிலில் அமல்படுத்தமுடியும் என்பதைச் சொல்பவர்களாகவும் திகழ்வார்கள்.

ஆழ்ந்த அறிவு வருவது அனுபவத்தில் இருந்துதான் என்று சும்மாவா சொன்னார்கள் முன்னோர்கள். அடுத்தபடியாக அனலிடிக்ஸ் டிப்பார்ட்மெண்டிற்கு தேவைப்படுவது நல்லதொரு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் நிபுணர். டொமைன் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் ஸ்டாடிஸ்டிக்ஸ் நிபுணர் என்ற இரண்டுபேரும் சேர்ந்து கிட்டத்தட்ட கம்ப்யூட்டருக்கு (அனலிடிக்ஸ் சாப்ட்வேர் வழியாக) அந்தத்தொழிலில் கிடைக்கும் டேட்டாக்களைக் கொண்டு எப்படி தொழில் குறித்த அறிவையும், அது குறித்த முடிவெடுக்கும் திறமையை வளர்க்க உதவும் விஷயங்களையும் கண்டுபிடிப்பது என்று சொல்லித்தர ஆரம்பிக்கின்றார்கள் என்று சொல்லலாம். ஒரே மாதிரியான டேட்டாக்களும் எடுக்கவேண்டிய முடிவுகளும்/கேள்விகளும் தொடர்ந்து வருவதில்லை.

வேலை வாய்ப்புகள்

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு சீசனிலும் வெவ்வேறு வகையான டேட்டாக்கள். வெவ்வேறு வகையான சூழ்நிலைகள் மற்றும் விடைதேடப்படும் வெவ்வேறு விதமான கேள்விகள் என மாற்றம் என்பது தொடர்ந்து வருவதுதானே பிசினஸில் இருக்கும் சவால். சொல்வதற்கு சுலபமாய் இருந்தாலும் நிஜத்தில் மிகவும் கடினமான காரியம் என்றே இதைச் சொல்லவேண்டும்.

ஸ்டாட்டிஸ்டிக்ஸ் வல்லுநரும் அனலிடிக்ஸ் சாப்ட்வேர் ப்ரோகிராம் செய்யும் நபரும் ஒரே ஆளாக இருப்பார்கள். டொமைன் ஸ்பெஷலிஸ்ட், ஸ்டாட்டிஸ்ட்டீஷியன், அனலிடிக்ஸ் சாப்ட்வேர் ப்ரொகிராமர் என இந்த ப்ராசஸில் இருக்கும் மூன்று பேருக்கு நடுவே இருக்கும் கெமிஸ்ட்ரியின் அளவு சூப்பராய் இருந்தால் கண்டுபிடிப்புகளும் அதனால் வரும் பலன்களும் சூப்பராய் இருக்கும் எனலாம்.

ஒரு திரைக்கதை சினிமாவாக ஜெயிக்குமா, அடுத்த வருடம் எத்தனை யூனிட் மின்சாரத்தை மக்கள் உபயோகிப்பார்கள், நாம் ஒதுக்கியிருக்கும் விளம்பரத்துக்கான பட்ஜெட் தொகையில் பிட்நோட்டீஸ், நியூஸ் பேப்பர், வாரப்பத்திரிகை, போஸ்டர், இண்டர்நெட் என எந்த அளவுக்கு பிரித்து செலவு செய்வது, ஒரு ஆளின் குவாலிபிகேஷன் மற்றும் அன்று வரை அவர் வேலைபார்த்த கம்பெனிகளை வைத்து அவருடைய திறமையை கணிப்பது, கட்சிகளின் தேர்தல் வெற்றியை கணிப்பது, நீங்கள் எழுதும் மெயிலை வைத்து நீங்கள் என்ன மனநிலையில் இருக்கின்றீர்கள் என்று அளவிடுவது, படிப்புக்கு மாணவன் மூட்டை கட்டிவிடுவானா என்று கணிப்பது, ஆயுள் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இத்தனை பேரில் எத்தனை பேர் இறந்துபோவார்கள் என்று கணிப்பதையெல்லாம் தாண்டி இன்னார் எப்ப பூலோகத்தை விட்டு கிளம்புவார் என்று அலசுவது, ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இந்த ஆள் இந்த ஆப்பரேஷனைத் தாங்குவாரா என்பதைத் தெரிந்துகொள்வது, ஒரு நபர் இன்கம்டாக்ஸ் கட்டாமல் ஏமாற்றுகின்றாரா என்பதை டேட்டா மற்றும் அவர் அப்லோட் செய்த புதிய பார்ச்சூனருடன் நின்று எடுத்துக்கொண்ட செல்ஃபீ போட்டோவையும்/யூரோப்பில் நான் என்று தம்பட்டம் அடித்த போட்டோவையும் சேர்த்துப் பார்த்து அனலைஸ் செய்வது.. என இன்றைக்கு அனலிடிக்ஸ் பல இடங்களில் புகுந்து கலக்குகின்றது.

இப்படி அனலிடிக்ஸ் மூக்கை நுழைக்காத துறையே இல்லை என்பதால் ஒவ்வொரு துறையிலும் நல்லதொரு அனுபவம் நிறைந்த நபருக்கு சூப்பரான வேலை வாய்ப்பு அனலிடிக்ஸ் டிப்பார்ட்மெண்ட்டில் காத்துக்கொண்டிருக்கின்றது.

cravi@seyyone.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x