Published : 15 Mar 2018 08:34 AM
Last Updated : 15 Mar 2018 08:34 AM

வங்கி மோசடிகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கியால் தடுக்க முடியாது: ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் கருத்து

வங்கி மோசடிகள் அனைத்தையும் தடுக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கூறியுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடு நடந்து ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் உர்ஜித் படேல் இவ்விதம் கருத்து தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. ரிசர்வ் வங்கிக்கு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. இதனால் அனைத்து வங்கி மோசடிகளையும் ரிசர்வ் வங்கியால் தடுக்க முடியாது என கூறியிருக்கிறார்.

காந்திநகரில் இருக்கும் குஜராத் தேசிய பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உர்ஜித் படேல், மேலும் கூறியதாவது:

வங்கித்துறையில் நடக்கும் மோசடிகளை பொறுத்துக்கொள்ள முடியாது. ரிசர்வ் வங்கிக்கும் கோபம் இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்தத்தான் இந்த நிகழ்ச்சியில் பேச ஒப்புக்கொண்டேன். மோசடி நடக்கும் ஒவ்வொரு இடத்திலும் ரிசர்வ் வங்கி இருக்க முடியாது. வங்கி சட்டப்படி ரிசர்வ் வங்கிக்கு குறைந்தபட்ச அதிகாரமே இருக்கிறது. நாட்டின் எதிர்காலத்தை சில தொழிலதிபர்கள் தங்களது சுயலாபத்துக்காக சுரண்டுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. பொதுத்துறை வங்கிகளில் நடக்கும் மோசடிகளை பார்க்கும் போது ரிசர்வ் வங்கிக்கும் கோபம் வருகிறது. தவிர தனியார் வங்கிகளை விட பொதுத்துறை வங்கிகளில் ஒழுங்கு குறைவாக இருக்கிறது. மோசடி நடக்கும் அனைத்து இடங்களிலும் ரிசர்வ் வங்கி இருப்பது என்பது சாத்தியம் இல்லை.

தற்போது நடந்திருக்கும் மோசடிகளை விரிவாக விசாரித்து தண்டனை வழங்கும்பட்சத்தில்தான் எதிர்காலத்தில் மோசடிகள் நடப்பதைத் தடுக்க முடியும். இதுபோன்ற மோசடிகளில் இருந்து தங்களை தற்காத்துகொள்ள வங்கிகள் அதிக மூலதனத்தை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

பொதுத்துறை வங்கிகளை நிர்வகிப்பதில் ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்துக்கும் பங்கு இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் அதிகாரத்துக்கு எல்லை இருக்கிறது. பொதுத்துறை வங்கிகளை முழுமையாக நிர்வகிக்க ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் சட்ட அங்கீகாரம் தேவைப்படுகிறது. வங்கியின் இயக்குநர் குழு அல்லது உயர் அதிகாரிகளை நீக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அதேபோல பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் அதிகாரமும் இல்லை. இதுபோல ரிசர்வ் வங்கிக்கு பல கட்டுப்பாடுகள் இருக்கிறது. வாராக்கடன் உள்ளிட்ட மிகப்பெரிய விஷயங்களில் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தி வருகிறது என்றார் உர்ஜித் படேல்.

பிப்ரவரி 14-ம் தேதி பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. அதன் பிறகு உர்ஜித்படேல் இப்போதுதான் பொது அரங்கில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x