Published : 09 Mar 2018 09:49 AM
Last Updated : 09 Mar 2018 09:49 AM

கனரக பொறியியல் துறை மேம்பாட்டுக்கு அடுத்த 2 ஆண்டுகளில் 60 கோடி டாலர் ஒதுக்கீடு: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

கனரக பொறியியல் துறை மேம்பாட்டுக்கு 60.7 கோடி டாலர் அளவிலான திட்டங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மற்றும் சென்னை பகுதிகளில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். பொறியியல் பொருட் கள் ஏற்றுமதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்பட்டுவரும் அமைப்பான ஈஈபிசியின் சர்வதேச பொறியியல் மூலப் பொருட்கள் கண்காட்சி (ஐஈஎஸ்எஸ்) துவக்க விழாவில் அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

பாய்லர் மற்றும் டர்பைன் துறையில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் பொது உபயோகக் கருவிகள் மற்றும் டிராக்டர் துறை இருக்கிறது. மொத்த முதலீட்டில் இந்தத் துறைகள் 98 சதவீதம் பங்கு வகிக்கின்றன. விவசாயம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கு உதவும் பம்புகள் உற்பத்தியின் 60 சதவீதம் கோயம்புத்தூரில் நடக்கிறது.பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகத்தின் செயல்பாடு சிறப்பாக இருப்பதால்தான் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தக் கண்காட்சி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்று கூறினார். விழாவில் பேசிய இந்திய வர்த்தகத் துறை செயலாளர் ரீட்டா தியோஷியா அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகளை பல்வேறு துறைகளில் மாற்றியமைத்திருப்பதன் மூலம் இந்த நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 10-ம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெற இருக்கிறது. தமிழகத்துடன் இணைந்து ஹரியாணா மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்கள் இந்த நிகழ்வை நடத்துகின்றன.

மேற்கு வங்காள மாநிலத்துக்கு இந்த ஆண்டு அதிக கவனம் அளிக்கப்பட இருக்கிறது. வங்க தேசம், கொரியா, தைவான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உஸ்பெகிஸ்தான், செக் குடியரசு மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

செக் குடியரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தாமஸ் ஹியூனர், இந்தியாவுக்கான செக் குடியரசு தூதர் மிலன் ஹோவர்கா போன்றோர் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி சம்பத், சிறுகுறு தொழில்துறை மற்றும் கிராமப்புறத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், ஈஈபிசி தலைவர் ரவி சேகல் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x