

திவாலானதாக அறிவிக்கக் கோரிய ஏர்செல் நிறுவனம் மிகுந்த நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. அந்த நிறுவனத்தில் பணியாற்றிய 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமலும், மின்கட்டணம், தண்ணீர் கட்டணம் செலுத்த முடியாமலும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் சிவசங்கரன் என்பவரால் கடந்த 1999 -ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டது. 8.5 கோடி வாடிக்கையாளர்களுடன் 6-வது இடத்தில் இருந்த ஏர்செல் நிறுவனம், ஜியோ, வோடபோன், ஏர்டெல் போன்ற பல்வேறு நிறுவனங்கள் வந்ததைத் தொடர்ந்து போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறியது.
இதனால் வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து படிப்படியாக விலகி வேறு நிறுவனங்களை நாடினர். இதற்கிடையே கடந்த வாரத்தில் இருந்து ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் பிரச்சினை ஏற்பட்டு அழைப்புகளும் செல்லவில்லை, யாருடைய அழைப்புகளையும் ஏற்கவும் முடியவில்லை.
இந்நிலையில், ஏர்செல்லின் சிக்னல் கோபுரங்களை வைத்திருக்கும் ஏஜென்சிகளுக்கு வாடகைக் கட்டணம் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால், சிக்னல் தடைபட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிறுவனங்களுக்கு மட்டும் ஏறக்குறைய ரூ.30 ஆயிரம் கோடி கட்டணத்தை ஏர்செல் நிறுவனம் நிலுவையில் வைத்துள்ளது.
இதற்கிடையே தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தில் எர்செல் தொடர்பு நிறுவனம் தங்கள் நிறுவனத்தை திவால் என அறிவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தது. இதன்பின்னர் ஏர்செல் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். ஏர்செல் வாடிக்கையாளர்கள் எம்என்பி மூலம் பல்வேறு செல்போன் சேவை நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர்.
இதற்கிடையே ஏர்செல் நிறுவனத்தில் பணியாற்றும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் அந்த நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இது குறித்து ஏர்செல் நிறுவனத்துக்காக தேசிய கம்பெனி சட்ட தீர்பாயத்தில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் ஜானக் துவராகதாஸ், தி இந்துவிடம்(ஆங்கிலம்) கூறியதாவது:
தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தில் நிறுவனம் திவால் ஆனதாகக் கோரி ஏர்செல் செல்லுலார், டிஷ்நெட் வயல்லெஸ் சர்வீஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு இடைக்கால நிவாரணம் அல்லது மிக விரைவாக தீர்வு கேட்டு நாடி இருக்கிறோம்.
ஏனென்றால் நிறுவனத்தின் அவசரமான, அத்தியாவசியமான சேவைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதால் இடைக்கால நிவாரணம் கோரியுள்ளோம். பிப்ரவரி மாதத்தில் இருந்து நிறுவனத்தில் பணியாற்றும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஊதியம் தரவி்ல்லை. மின்கட்டணம், குடிநீர், தண்ணீர் கட்டணம் செலுத்துவதற்கு நிதி தேவைப்படுகிறது. இதுபோன்ற அத்தியாவசிய சேவைகளைத் தொடர்வதும் அவசியமாகும். இந்த மனு வரும் 8-ம்தேதி விசாரணைக்கு வருகிறது.
ஏறக்குறைய நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடன் நிலுவையில் இருக்கிறது. இதில் ரூ.15 ஆயிரம் கோடி நிதி நிறுவனங்களுக்கும், ரூ.35 ஆயிரம் கோடி சிக்னல் டவர் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு நிலுவையாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.