

விலைகளில் மிகவும் போட்டியான இந்தியச் சந்தைகளில் சீன நிறுவனங்களின் செல்போன்களுக்கு அதிக போட்டப்போட்டி நிலவுகிறது. ஒரு நிறுவனத்தின் விற்பனை சாதனைகளை புதிதாக வந்த நிறுவனம் முறியடிக்க இது நிறுவனத்தின் இந்தியத் தலைமைகளிடையே கருத்து மோதல்களை உருவாக்கி வருகிறது.
இதனையடுத்து இப்போதைய ட்ரெண்ட் நிறுவனத் தலைமைகள் ட்விட்டரில் ஒரு நிறுவனத்துக்கு எதிராக மற்றொரு நிறுவனம் மோதும் போக்கு நிலவி வருகிறது, இதனால் சிலபல கிண்டல் மீம்களும் தொடர்வதைத் தவிர இதிலெல்லாம் ஆரோக்கியமானது என்ன உள்ளது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஜியோமியின் இந்திய நிர்வாக இயக்குநர் மனுகுமார் ஜெயின், 2018-ல் தன் நிறுவனம் அனைத்து விற்பனை சாதனைகளையும் முறியடித்த நிலையில், 2019-ல் போட்டி நிறுவனம் ரியல்மீ அதிக விற்பனையில் சந்தையில் புகுந்து விளையாட, ரியல்மீ செல்போன் பற்றி தன் சமூகவலைத்தள பதிவில், ரியல்மி 3 ப்ரோ போனில் உள்ள குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 710 குறித்து பதிவிடும் போது இது சமீபத்திய ரெட்மி நோட் 7 ப்ரோவில் பயன்படுத்தப்படும் ஸ்னாப்ட்ராகன் 675க் காட்டிலும் பழையது என்று பதிவிட்டார்.
இதற்கு சும்மா இருப்பாரா ரியல்மி தலைமை இயக்குநர் மாதவ் சேத் “யாரோ பயப்படுகிறார்கள்” என்று சியோமி நிர்வாக இயக்குநரைக் குறிப்பிட்டு கேலி செய்துள்ளார்.
கடந்த மே 2018-ல் வந்த ரியல்மி வெகு அவசரகதியில் 60 லட்சம் போன்களை விற்று அதிவேக விற்பனையாளராகத் திகழ்கிறது. இதனால் சியோமி மிகவும் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறது என்கிறார் ரியல்மி பாஸ்.
இருவரது ட்வீட்களின் மறு ட்வீர்கள் வேகம் எடுக்க அசல் ட்வீட்கள் நீக்கப்பட்டன. 2019-ல் முதல் காலாண்டில் ரியல்மி இந்தியச் சந்தையில் 7% சந்தையை தங்கள் வசமாக்கியுள்ளதுதான் சியோமி நிறுவனத் தலைவரின் கவலைக்குக் காரணம் என்கின்றனர் இந்தத் தொழிற்துறை நிபுணர்கள்.