

இரு சக்கர வாகன உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் புதிய ஆலையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. புதிய ஆலை தொடங்கு வதற்கான ஒப்பந்தம் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் செவ் வாய்க்கிழமை கையெழுத்தானது.
ஒப்பந்தத்தில் நிறுவன பிரதிநிதி ராகேஷ் வசிஷ்ட் மற்றும் மாநில அதிகாரிகள் கையெழுத்திட்டனர். இந்த புதிய ஆலை ஆண்டுக்கு 18 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த ஆலையில் ஹீரோ நிறுவனம் ரூ. 1,600 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. ஸ்ரீ சிட்டியில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இப் புதிய ஆலை அமைய உள்ளது. 18 மாதங்களில் இந்த ஆலை உற்பத்தியைத் தொடங்கும்.
இந்த ஆலை மூலம் 3,000 பேருக்கு நேரடி வேலை கிடைக்கும். இந்த ஆலைக்கு 600 ஏக்கர் நிலத்தை மாநில அரசு அளிக்கிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தென்னிந்தியாவில் ஆலையைத் தொடங்குவது இதுவே முதல் முறையாகும். இந்நிறுவனத்துக்கு ஏற்கெனவே 5 ஆலைகள் உள்ளன. ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய முதலீட்டுத் திட்டம் இதுவாகும்.
கடந்த வாரம் சனிக்கிழமை புது டெல்லியில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் துணைத் தலைவர் பவன் முன்ஜால் சந்தித்தார். தங்கள் மாநிலத்தில் ஆலை அமைப்பதற்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதாக சந்திரபாபு நாயுடு உறுதி அளித்தார்.