

நிலக்கரி சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படும் நிலக் கரியை அருகிலுள்ள அனல் மின் நிலையங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஒப்புதல் அளித்துள்ளார். முதல் கட்டமாக குஜராத் மாநிலத்தில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி சப்ளை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரயில்களின் மூலம் நிலக்கரி சப்ளை செய்வதில் ஆகும் கால தாமதம் குறையும். அத்துடன் இதற்கான சரக்குக் கட்டணமும் மீதமாகும். அமைச்சரின் இப்புதிய உத்தரவு நிலக்கரி சுரங்கங்களிலிருந்து அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி சப்ளை செய்வதில் புதிய அணுகுமுறை உருவாக வழியேற்படுத்தியுள்ளது.
இதன்படி நிலக்கரி சுரங்கங்கள் அருகிலுள்ள அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை சப்ளை செய்யும். இப்போது கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு வடக்கு பிராந்தியத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களிலிருந்து நிலக்கரி விநியோகிக்கப்படுகிறது. அதேபோல கிழக்குப் பிராந்திய அனல் மின் நிலையங்கள், மத்திய மற்றும் வடக்கு பிராந்திய பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கங்களிலிருந்து நிலக்கரியை பெறுகின்றன.
சரக்குக் கட்டணமும் அடிக்கடி உயர்த்தப்படுவதோடு கால தாமதமும் ஏற்படுகிறது. மேலும் அனைத்துப் பகுதிகளையும் ரயில்வே லைன் மூலம் இணைப் பதில் இடர்பாடு நிலவுகிறது. அத்துடன் போக்குவரத்தில் கால தாமதம் மற்றும் சரக்குப் பெட்டிகள் பற்றாக்குறை ஆகியவற்றையும் இதன் மூலம் தவிர்க்க முடியும்.